-இலங்கைக்கு கடும் வறட்சி அபாயம் – சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரிக்கை
எல்-நினோ காலநிலை நிலைமை தற்போது வேகமாக தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் உச்சநிலை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க பட்டபந்தி தெரிவிக்கையில், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்நோக்கும் வாய்ப்பு அதிகம் எனக் கூறினார்.
மேலும், எல்-நினோவின் உச்சக்கட்ட தாக்கம் நவம்பர் மாதத்திற்குள் பதிவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது இலங்கைக்கு மட்டும் அல்லாது உலகளாவிய சுற்றுச்சூழல் சவாலாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் செயற்பாட்டுப் பங்களிப்பும் இன்றியமையாதவை என்றும், எதிர்காலத்தில் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, அனைவரும் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், எல்-நினோவின் தாக்கத்தால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.



