மலையகத் தமிழ் சமூகத்தினர் கடந்த 200 ஆண்டுகளில் நாட்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகக் கொண்டு வந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அந்தப் பணத்தின் மூலமே இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாகக் கூறி வழக்குத் தொடருமாறு தமது அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் காணிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாத நிலை இருப்பதால், வழக்குகளைத் தாமதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது இதுபோன்ற 7,550 வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றில் சில வழக்குகள் தொடரப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளைக் கொண்ட நவோதயபுரம் வீடமைப்புத் திட்டத்தை மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.




