web log free
June 14, 2024

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியானது போக்குவரத்து செய்யமுடியாத வகையில் வீதி நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்தும் 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வடக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தினால் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் மக்கள் குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் திரைப்படம் மற்றும் சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது.

படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.

ரஜினிக்கு அடுத்தப்படியாக கதையில் அதிக முக்கியதத்துவம் கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவரும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா என படத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கதாபாத்திரங்களில் வலு இல்லாததால் மனதில் தங்காமல் செல்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை உள்ளிட்ட சுத்துப்பட்டு கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் காளையன் (ரஜினிகாந்த்). அவரின் ஒரே தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). அவர் பிறக்கும்போதே அம்மா இறந்துவிடுவதால் அண்ணனாக, தாயாக, எல்லாமுமாகவும் இருந்து உயிருக்கு உயிராக வளர்க்கிறார் காளையன். அடிக்கடி சண்டை போட்டு வம்பு வளர்க்கும் தன் எதிரி பிரகாஷ்ராஜ் மனம் திருந்தி வந்து தம்பிக்கு சம்பந்தம் பேச, தங்கையை மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதிக்கிறார் காளையன். ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைக்க, தங்க மீனாட்சி திடீரென்று காணாமல் போகிறார். அண்ணன் காளையன் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்.

கீர்த்தி சுரேஷ், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டு கொல்கத்தாவுக்குச் சென்றுவிடுகிறார்.ஆனால் அதில் நடந்த குழப்பத்தை புரிந்துகொள்ளும் ரஜினி, கொல்கத்தா சென்று தங்கை கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கையில் இருக்கும் ​​நிறைய பிரச்சனைகளை மறைமுகமாக எதிர்கொள்கிறார். ஒரு அண்ணனாக, ‘காளையன்’ ரஜினி எப்படி தன் தங்கையை ஆபத்தில் இருந்து காக்கிறார் என்பதுதான் ‘அண்ணாத்த’.

ரஜினியின் உற்சாகமும், பேச்சும் இப்போதும் அசரடிக்கிறது. நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரக்கும்போது மட்டும் கொஞ்சம் சிரமப்படுகிறார். முதிர்ச்சியும், களைப்பும் அப்பட்டமாகத் தெரிகிறது. தங்கை மீதான பாசத்தையும், சொந்தங்கள் மீதான பற்றையும், ஊர் மக்கள் மீதான மரியாதையையும், நயன்தாரா மீதான காதலையும் வெளிப்படுத்தும்போது எனர்ஜியில் சளைக்காத மனிதராகத் தெரிகிறார். ஒவ்வொரு காரணத்தையும், ஒப்பீட்டையும் சொல்லி வசனம் பேசுவது அரதப் பழசான ஸ்டைல்தான் என்றாலும் ரஜினி பேசும் விதம் அழகு. தங்கை என்பவர் உறவுக்கும் மேலான உயிர் என்று பேசும் ரஜினி, தங்கையை உறவினர்கள் தூற்றும்போதும், மோசமான முடிவை நோக்கித் தள்ளும்போதும் என் தங்கச்சி என்று ரஜினி அளவாக நிறுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரஜினியைத் தாண்டி படத்தில் ஸ்கோர் செய்வது கீர்த்தி சுரேஷ்தான். கம்பெனி சிஇஓ ஆனாலும் அப்பாவித் தங்கையாக, கண்ணீரும் கம்பலையுமாக பாத்திர வடிவமைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். பாவப்பட்ட பெண் என்கிற பிம்பத்தை வரவழைத்து பரிதாபத்தை அள்ளிச் செல்கிறார். நயன்தாராவுக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம்தான். அது உறுதுணைக் கதாபாத்திரமாகவே அமைந்து விடுவதுதான் சோகம்.

வெற்றி பழனிச்சாமி திருவிழாக் கூட்டத்தை தன் கேமராவில் அடக்கியுள்ளார். இமானின் இசையில் அண்ணாத்த, சார சாரக் காற்றே, வா சாமி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில்தான் இரைச்சலைக் கூட்டி இம்சிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தொழில்நுட்ப அம்சங்கள் போதுமான அளவுக்கு பலம் அளிக்கவில்லை.

கொல்கத்தாவுக்கு ரஜினி சென்று ஒரே பிரச்சினையில் தலைநகரே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்வதாகக் காட்டுவதெல்லாம் காதில் பூந்தோட்டத்தைச் சுற்றும் வேலை. எந்த லாஜிக்கும் இல்லாமல் ரஜினி மேஜிக் போதும், ரசிகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று சிவா நம்ப வைக்கப் போராடியிருக்கிறார். அந்தப் போராட்டத்தில் காயங்கள் ரசிகர்களுக்கே கிடைத்துள்ளன.

மொத்தத்தில், ரஜினியின் இந்த 'அண்ணாத்த' குடும்ப ரசிகர்களின் அபிமானமாக படமாக அமைந்தாலும் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான படமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

உலகம் முழுவதிலும் பரவலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை ஒரு புதிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றான, உலக வர்த்தக மையத்தில் வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி அடிப்படையிலான அனிமேஷன் மற்றும் அலங்காரங்கள் இடம்பெற்றன. நவம்பர் 2 மாலை 6 மணிக்கு தொடங்கிய அனிமேஷன் நவம்பர் 4 நள்ளிரவு வரை லைவாக டிஸ்ப்ளே செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தீபாவளி கொண்டாட்டத்தில் கண்கவரும் வான வேடிக்கைகளும் இடம் பெற்றது.

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை ஒரு காரணமாக கூறினார் அவர்.

"நாம் நம் செயல்திட்டத்தை மாற்ற வேண்டும், கொரோனா அதிகம் பரவிய பின் எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, பரவலைத் தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார் ஹான்ஸ்.

Page 2 of 5