கடவத்த - தவதகஹவத்த பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சூரியபல்வ, கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவர் ஆவார்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போது, அவரது மூத்த சகோதரர் மற்றும் அவரது மகனுடன் வந்த மற்றுமொரு நபர் குறித்த நபரையும் அவரது மனைவியையும் அதே துப்பாக்கியால் சுட்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலத்தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றத்திற்காக வந்த மூன்று சந்தேகநபர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரைபிள் ரக துப்பாக்கி மற்றும் சந்தேகநபர்கள் வந்த முச்சக்கரவண்டி என்பன கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 56, 20 மற்றும் 25 வயதுடைய கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று கொழும்பு, பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தடைகளை மீறி கொழும்பில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
வடக்கு, வட கிழக்கு, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இயலுமானவரை வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வசந்த முதலிகே இராஜினாமா செய்துள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் புதிய அழைப்பாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் பேரவை அமர்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இந்த புதிய நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ, ருஹுணு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இத்தேர்தலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் கடந்த காலங்களில் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளுடன் உடன்படாத காரணத்தினால் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர்களில் ஒருவரான ஜனித் ஜனஜய அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் ரிபாத் குருவி (பைரா) ஆகியோர் புதிய அழைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக இன்று (17) நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவரும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (16) இடம்பெற்றதோடு இதில் பின்வரும் விசேட யோசனைகள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியை கட்டியெழுப்ப தாம் செயற்படுவதாகவும்,இதற்குத் தேவையான உள்ளக மற்றும் வெளியக ரீதியான பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழுவில் தெரிவித்தார்.
குறித்த கூட்டணியை கட்டியெழுப்பும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தரப்புகளுடன் உரிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒழுக்காற்றை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் பணிக்கப்பட்டனர்.
*விசேட பிரேரணைகள்!
இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் கலந்து கொண்டதோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நம்பகமான தலைவர் வேறு எவரும் இல்லை எனவும்,நம்பகமான தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
*இதன் பிரகாரம்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவே போட்டியிட வேண்டும் என சுஜீவ சேனசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் முன்மொழிந்ததோடு, இதற்கு செயற்குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.
சமிந்த விஜேசிறி,எஸ்.எம்.மரிக்கார், ரெஹான் ஜயவிக்ரம,ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்டவர்கள் கருத்துத் தெரிவித்து இந்த பிரேரணைக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 412 டெங்கு நோயாளர்கள் 15ம் திகதி பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் அவரை சதி செய்து, கொலை செய்ய குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அமைய, பிரதான சாட்சியாக மன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது வலுக்கட்டாயமாக பெறப்பட்ட வாக்குமூலம் என விசாரணைகளின் போது எதிர்த்தரப்பினரால் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹான் அபேசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து, குறித்த நபர் 15 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா மன்றில் ஆஜராகியிருந்தார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைக்கா நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை தியாகராய நகர் உள்ள விஜயராகவா சாலையில் உள்ள லைக்கா நிறுவன அலுவலகம், அடையாறில் உள்ள சுபாஷ்கரனின் இல்லம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விஜயராகவா சாலையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் பெரிய அளவில் இந்நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான கணக்குகள் தொடர்பாகவும் (இதை சரியாக அந்நிறுவனம் காட்டவில்லை என புகார் உள்ளது). சோதனை நடைபெறுவதாக தெரிய வருகிறது.
சோதனை முடிவில் நிறுவனம் எந்த அளவுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வரும் என கூறப்படுகிறது.