web log free
August 07, 2025
kumar

kumar

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 10 மில்லியன் ரூபா நட்டஈடு தொகையை வழங்குவது சிறிய விடயம் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் மாத்திரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாவிட்டாலும், தனது நண்பர்கள் உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நானுஓயா பகுதியில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க விடுத்த உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். 

பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்தியசாலைக்கு சென்று அவரை பரிசோதித்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்ச்சியாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முதற்கட்டமாக இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு அந்த அமைச்சுப் பதவிகள் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்குச் சென்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தடுவ வீதி மஹானியார சந்தி பகுதியில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் செய்து முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

போராட்டத்தின் பின்னர் ஏமாற்றமடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விரக்தியடைந்துள்ள மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கான விசா மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளிலும் புதிய முன்னணிகளிலும் இணைந்துள்ளனர்.

நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
 
வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் , உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
உயிரிழந்தவர்களின் விபரம்
01:- அப்துல் ரஹீம் (55)
02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13)
04:- நபீஹா (08)
05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (சாரதி)
ஆட்டோ சாரதி
07:- சன்முகராஜ் (25)
 
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.
 
இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், 'பிரேக்' செயற்படாததாலும் நானுஓயா - ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பஸ் சுமார் 50 அடிவரை பள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. வேனும், ஆட்டோவும் கடுமையாக சேதமானது.
 
இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
 
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹொலிகொப்டர்மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. 
 

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூலகாரணத்தை வெளிக்கொணர, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பலவீனமடையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. 

அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அத்துடன் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடியின மக்களுக்கு முறையான அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னில இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மக்களின் தனித்துவமான பொருளாதார, சமூக, கலாசார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை சட்ட தரப்பினர் கிரிமினல் குற்றங்களாக அறிமுகப்படுத்தியதால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முறைப்பாட்டில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, பொலிஸ் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, காணி அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் என்பன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புகாரில், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களிலும், அவர்கள் மற்றும் அவர்களது பூர்வீக நிலங்களிலும் நிம்மதியாக வாழ உரிமை கோரியுள்ளனர்.

பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னிலட்டோ தலைமையிலான குழுவினர் கடந்த 18ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

தம்பனை, பொல்லேபெத்த, ஹென்னானிகல, வாகரை, கரகச்சேனை, தோக்கூர், கட்டப்பறிச்சான் ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிவாசி தலைவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd