நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் டி.வி.எஸ்.சில்வா தெரிவித்துள்ளார்.
60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஒரு துரதிஷ்டமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தை இனியும் இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தயவுசெய்து ஆட்சியை விட்டு வெளியேறி, இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு குழுவைத் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010-2014 வரை அவர் வீடமைப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அப்போது அரச பொறியியல் கூட்டுத்தாபனம் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இருந்தது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்கள் பல முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொறியியற் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்தக் காலப்பகுதியில் தனது உறவினர்களுக்கு வீடுகளை வழங்கியதாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில நேற்று (14) பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அங்கு அவர் அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடினார், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா, நன்றாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
அவர்தான் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.
இலங்கை வரலாற்றில் அதிகூடிய எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற இவ்வேளையில் சாகர காரியவசம் வாய்மூடி இருப்பதை கம்மன்பில வெளிப்படுத்தினார்.
புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பதவி விலக வேண்டும் என சாகர காரியவசம் ஏன் இன்னும் கடிதம் எழுதவில்லை என அவர் கேள்கி எழுப்பினார்.
தான் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பரிந்துரையின் பேரில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது, மொட்டுக்கட்சி பொதுச் செயலாளர் காரியவசம் உடனடியாக பதவி விலகுமாறு தமக்கு கடிதம் எழுதியதாக கம்மன்பில நினைவு கூர்ந்தார்.
தற்போது டீசல் ஒரு லீற்றர் 55 ரூபாவால் அதிகரிக்கப்படும் போது காரியவசம் உயிருடன் இருந்திருந்தால் அவ்வாறான கடிதம் எழுதப்பட்டிருக்கும் என கம்மன்பில குறிப்பிட்டார்.
இக்காலத்தில் சாகர காரியவசம் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் கம்மன்பில சொன்ன கதையில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.
மட்டக்களப்பு – கரடியனாறு, ஈரளக்குளம் குடாவெட்டை வயலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(14) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வென்னப்புவ – வயிக்கால பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகப்புத்தகத்தின் (Facebook) ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் விருந்துபசாரமொன்றை முன்னெடுப்பதாக வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அனுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த 2 கிராம் 110 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 போதைவில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம்(16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.