web log free
September 16, 2024
kumar

kumar

டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த முறை கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் உரிமையாளர்களும் போக்குவரத்து ஆணைக்குழுவும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது கட்டணத்தை திருத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

அவருடன் இந்திய நாட்டின் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் ஒரு தூதுக்குழுவாக இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் இன்று (01) காலை 08.31 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறும் ‘நாம் 200’ என்ற நிகழ்வில் அவர் விசேட அதிதியாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்திய நிதி அமைச்சரை சந்தித்துள்ளனர். 

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 14,401 எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 14,401 பேர், கம்பஹா மாவட்டத்தில் 13,958 பேர், களுத்துறை மாவட்டத்தில் 4,354 பேர் உட்பட 68,114 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான 32,713 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இது 48% என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 356 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அமைந்துள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

டீசல் ஒரு லிட்டரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 351 ரூபாவாக காணப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை 356 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுப்பர் டீசலின் புதிய விலை 431 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 242 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 249 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவை பணம் கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்தார்.

தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தலையீடும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தத்தின் மத்தியில் அத்தியாவசிய சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 

"நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மாத்திரமன்றி மின்சார கட்டணம், நீர் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் உயர்ந்துள்ளது. மேலும் புதிது புதிதாக வரிகள் அறவிடப்படுகிறது. 

எரிபொருள், கேஸ் விலை அதிகரித்துள்ளது. ஹோட்டல் உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இப்படி அனைத்தும் விலை அதிகரித்திருக்கும் வேளையில் தொழிலாளர்களின் சம்பளம் மாத்திரம் அதிகரிக்காமல் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள அதிகரிப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அதன் பின்னர் எவ்வித சம்பள உயர்வும் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தனியார் துறை ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். 

இதேபோல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரச ஊழியர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இணையாக பெருந்தோட்ட தொழிலாளர்களையும் போராட்டக் களத்தில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்" என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (1) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அன்றைய தினம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்துக்கான உதவித்தொகை நவம்பரில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அஸ்வெசும வழங்க ரூ.850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, பணம் பெறப்போகும் பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை, 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (30) அமைச்சரவையில் உரையாற்றியதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை அறிந்து மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில குழுக்கள் தமது அழுத்தம் காரணமாகவே சம்பளம் அதிகரிக்கப்பட்டதென கூற முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியினால் நேற்று அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்களை கொழும்பு மின்சார சபை தலைமையகத்திற்கு வரவழைத்து இதனை செய்யவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.