கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னரே தகவல்களை வௌியிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
அவருக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்-டை-ஒக்சைடு கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதி மறியல் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இச்சலுகைக்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுப்பைப் பெறுவதற்கு வசிப்பிட கிராம அலுவலரின் சிபாரிசுடன் கூடிய கோரிக்கையை நிறுவன தலைவர் ஊடாக தமக்கு அனுப்பி வைக்குமாறு அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகா விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பு கீழே,
எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான விலைமனு கோரலை வழங்கியுள்ளார்.
கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நாட்களில் சிறுவர்களிடையே இன்ஃபுளுவென்சா (Influenza) தொற்று அதிகம் பதிவாகி வருவதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமென சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இருமல், காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே தொற்றுக்குள்ளான சிறுவர்களிடம் அதிகளவில் அவதானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவும் எனின், அது இன்ஃபுளுவென்சா தொற்றாகவே காணப்படுமென வைத்தியர் குறிப்பிட்டார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, முகக்கவசம் அணிவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த வாகனத்தில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் அமைச்சரின் வாகனத்தை இரும்பு கம்பியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சென்று கொண்டிருந்த போதே மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரின் சொகுசு ஜீப் மற்றைய காரை சேதப்படுத்தியதாகவும் அதில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் தனது வாகனத்திற்கு சேதம் விளைவித்ததை பார்த்து ஆத்திரமடைந்து அங்கிருந்த அமைச்சரின் வாகனத்தை இரும்பு கம்பியை எடுத்து தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தையும் ஜனவரி 1ஆம் திகதி காலை ராஜகிரிய, லேக் டிரைவில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரச்சாரத்தையும் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
புதிய கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர்களான அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் இது இடம்பெறவுள்ளது.
புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் கட்சி அலுவலகம் ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதலில் வரவுள்ளதாகவும், அதற்கு முகங்கொடுக்கும் வகையில், புதிய கூட்டணி வேறு எந்த அமைப்புக்கும் நிகரில்லாத சக்தியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கட்சி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கட்சி அலுவலக செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
65 வயதுடைய பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் சுவாசக் கோளாறுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவரது இடமாற்றத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட PCR சோதனையின் முடிவு, அவர் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்ததை வெளிப்படுத்தியது.
கம்பஹா வைத்தியசாலையில் அவருடன் அனுமதிக்கப்பட்டிருந்த உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இயன்றவரை முக கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் நிபுணரான டொக்டர்.சிந்தன பெரேரா கேட்டுக்கொள்கிறார்.
தம்பதீவா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொக்டர் ரோஹித முதுகல என்ற நிபுணர், நாட்டின் கோவிட் தொடர்பான உண்மைகளை விளக்குகிறார், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பயோஃபிலிம்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை இந்த நாட்களில் சோதிக்கப்படுகின்றன.
புதிய வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் இப்போது சளி எதிர்வினை போன்ற ஒரு சிறிய நோயின் வடிவத்தில் தோன்றுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
கோவிட் மரபணு பகுப்பாய்வின் இறுதி சோதனையில் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.