web log free
September 19, 2024
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நுவரெலியா நோக்கி பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று (3) பிற்பகல் வெல்லவாய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி திடீரென வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

புத்ருவகல பாடசாலையில் சுமார் 50 நிமிடங்கள் தங்கியிருந்த ஜனாதிபதி, மீண்டும் வாகனம் புறப்படும் வரை காத்திருந்ததுடன் பாடசாலை மாணவர்களும் அங்கு வந்து சிநேகபூர்வமாக உரையாடினர்.

அதன் பின்னர் ஜனாதிபதி வெல்லவாயவில் இருந்து தரை மார்க்கமாக நுவரெலியாவிற்கு புறப்பட்டார்.

பாரியளவிலான  கழிவுத் தேயிலை விற்பனை நிலையத்தை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (02) கண்டி தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடகும்புர, லிமகஹகொடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு உரிமம் இன்றி 6,652 கிலோ கழிவு தேயிலையை பதுக்கி வைத்திருந்த லிமகஹா கொடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கம்பளை தேயிலை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்ததாக அறிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று (2) முதல் அமுலாகும் வகையில் 25 சதமாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றுக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முழுமையான நட்டஈடு செலுத்தத் தவறியதால் அவர்களது சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2023 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரமாணப் பத்திரங்கள் மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரியப்படுத்த இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுகேகொடை இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் இந்த விடயம் முதன்முறையாக பேசப்பட்டதாக அறியமுடிகிறது.

இதில் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டுள்ளார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்ல முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களித்துவிட்டு கிராமம் நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இங்கு கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டன.  இவர்களில் 80% ஆண்களே பதிவாகியுள்ளனர். எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையிலானவர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகிறது" என்றார்.

டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02) ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 09ஆம் திகதி தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன்கிழமை (1) காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5 நாள் வேலையை வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பணவை வரையறை இன்றி வழங்க வேண்டும், மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய், மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

சுகாதார தொழிற்சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தினால் தூர இடங்களில் இருந்து வைத்திய சேவைக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை விரைவாக வழங்காது விட்டால் அனைத்து அவசர சேவைகளையும் பகிஷ்கரித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்து ஜயசூரிய தீர்மானித்தார்.

இதன்படி, கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.