தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியை குறைப்பதாக தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் போதே அபயதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர புதன்கிழமை (14) தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும், விற்பனை விலை 318.99 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் அவரது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மொட்டுக் கட்சி சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு மொட்டு கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதும் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் சம்பந்தப்பட்ட சிரேஷ்டர்கள் பங்கேற்கவில்லை.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்காக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதேவேளை மொட்டுக் கட்சிக்குள் ஜனாதிபதிக்கு ஆதரவான அணி மற்றும் எதிரான அணி என இரு பிரிவுகள் இருப்பதால் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாகவும் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஜனாதிபதியை காலால் இழுக்க் கூடாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரம் மீளும் என்ற பலமான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன் உடுகம்பொல ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக சிலர் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி ஏதும் இல்லை. எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். அந்த பதவிக்கு ஜனாதிபதியை நியமிப்பதற்கு கட்சி என்ற வகையில் நாங்கள் ஆதரவளித்தோம். அவரது அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் பார்த்து அந்த ஆதரவு வழங்கப்பட்டது. மற்றபடி நடக்கப்போவது இல்லை.
நாங்கள் இன்னும் 69 லட்சம் மக்களுக்காக நிற்கிறோம். தற்போதைய சூழ்நிலையால், அமைச்சர்கள் கிடைக்காததால், மூத்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஓராண்டுக்கு முன்பிருந்த நாட்டு நிலவரத்தையும், இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அன்று நாம் எடுத்த முடிவு சரியானது என உணர்கிறோம். எனவே, இந்தத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும், அதன் காலால் இழுக்கப்படக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். கட்சி என்ற ரீதியில் அடுத்த தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்று பார்ப்போம். இந்த தருணத்தில் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
ஊவா மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் இடையே சந்திப்பு இடம்பெற்றது.
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையில் சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய துறைகளில் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவாவை அண்மித்த மாகாணங்களின் எல்லைப் பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இணைந்து செயற்படுவதற்கான ஆரம்ப படியாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு ஊவா மாகாண ஆளுனர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சப்ரகமுவ மாகாணத்திற்கு பாரிய சேவையை செய்ய நம்பிக்கை உள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் தமக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரம் அதற்கு இருப்பதாகவும் நவின் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதியிடம் இருந்தே கற்றுக்கொண்டோம். நீங்கள் எங்காவது சென்று அந்த சவாலை ஏற்க வேண்டும். குறிப்பாக நிதி நெருக்கடி ஏற்படும் போது, அரசாங்க செலவினங்கள் குறைக்கப்படும் போது, சப்ரகமுவ கல்வி நிலையத்திற்கு எனது இயன்றவரையில் தனியார் துறையினரிடம் இருந்து பணம் பெற்று பெரும் சேவையை செய்ய எதிர்பார்க்கின்றேன். என்னால் அதைச் செய்ய முடிந்தால், 18 மாதங்களில் நான் ஒரு சாதனையைப் பெறுவேன். நான் எப்போதும் நம்பிக்கையான நபர். நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக உருவாக்க வேண்டும். இது ஒரு விதிவிலக்கான சம்பவம். எனது தந்தையே மாகாண சபைகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய மகனாக நான் ஆளுநரானேன் என்பது ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு. என்னால் இயன்றவரை சப்ரகமுவ மக்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புகிறேன்” என்றார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02) இராஜினாமா செய்திருந்தார்.
அவரது வெற்றிடத்துக்கே நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட நவீன் சிறிது காலம் கட்சி செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்த நிலையில் தற்போது ஆளுநர் பதவி பெற்றார்.
சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது கட்சித் தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒழுக்க விதிகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294.91 ரூபாவாகவும் விற்பனை விலை 309.22 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290.06 ரூபாவாகவும் விற்பனை விலை 303.73 ரூபாவாகவும் காணப்பட்டது.