பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் சட்ட ஏற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு வினவியமைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (12) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இதில் எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்து ஆராயப்பட்டன.
எந்த சட்ட அடிப்படையில் அவ்வாறான உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள், எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியது.
இது விடயம் தொடர்பான தகவல்களைக் கூடிய விரைவில் குழுவில் சமர்ப்பிக்குமாறு கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
துறைமுக நகரத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் தொடர்பிலும் குழு மேலும் கேள்வியெழுப்பியது. எனவே, குறித்த ஒழுங்குவிதிக்கு அனுமதி வழங்க முன்னர் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
ஸ்மார்ட் சிட்டி எண்ணக்கருவுக்கு அமைய தனியான நிலப்பரப்பில் துறைமுக நகரம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் கழிவுநீர் முகாமைத்துவம், புதுப்பிக்கத்தக்க சக்தி, உரிய வடிகாலமைப்புக்கான பொறிமுறைகள் காணப்படுகின்றனவா என்றும் குழு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது. கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் வடிகாலமைப்புத் தொடர்பில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கிடைத்த அனுபவம் துறைமுக நகரத்தை அமைக்கும்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் துறைமுக நகரின் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தியில் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டமையும் இங்கு தெரியவந்தது. இவை அனைத்தும் வரி செலுத்தும் நாட்டு மக்களின் பணம் என்பதால் இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை என்றும் குழு கேள்வியெழுப்பியது.
இதற்கமைய துறைமுக நகரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் வகைப்படுத்தல் மற்றும் வருமானம் கிடைக்கும் மார்க்கங்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.
நேற்று பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சடலம் நீல நிற பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (15) மாலை சீதுவை பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தில், தன்டுகங் ஓயாவின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..
நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட 12 பேர் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்து காணப்பட்டதாகவும் கூறினர்.
இவர்களது உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொரலலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.
பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அழைத்துச் செல்லவோ அல்லது இடம் மாற்றவோ வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (15) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன தாக்கல் செய்த மனு விசாரணை தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீடிப்பதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி ‘ஹரக் கட்டா தனது சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்ற (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில், நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர் இடையே கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
தற்போதைய அரசாங்கம் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை குறித்த நேரத்தில் நடத்தாமை மற்றும் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் டேனியல் ஷெரியும் கலந்து கொண்டிருந்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கு இந்த மஞ்சள் நிற மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.
ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்தி சேவை வினவிய போது தெரிவித்தார்.
இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின் நாணயசுழற்சியை ஒத்திவைக்க நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மைதானத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.