web log free
December 21, 2024
kumar

kumar

சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

அவ்வாறான அனுமதியற்ற அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிட அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனம் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் போது பணம் வசூலிக்கும் நபர் இல்லை எனில் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்வைக்கவுள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வலுப்படுத்தவும், பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கவும் கொண்டுவரப்படவுள்ள கட்டளைச் சட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விரிவான தகவல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுறுப்பிட்டியில் அமைந்துள்ள துப்புரவு முகவர் உற்பத்தி நிலையத்தில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தினால் அருகிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 85 மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

19 ஊழியர்கள் பணிபுரியும் குளோபல் கேர் என்ற தொழிற்சாலையில் பாரிய புகை சூழ்ந்ததால், தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள புனித செபஸ்தியன்ஸ் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் தீ பரவியதும் வெலிசர கடற்படையின் தீயணைப்புப் பிரிவு, நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவுகள் இணைந்து தீயை அணைத்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலிருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றிரவு நுவரெலியா டோப்பாஸில் தம்பதியொருவர் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த ஆணுக்கு 28 வயது என்றும் பெண்ணுக்கு 26 வயது என்றும், அப்பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதி என்றும் பொலீசார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீரை திறந்துவிடும் நடவடிக்கை இன்று(08) அதிகாலை 2.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், செக்கனுக்கு 42 கன மீட்டர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று(08) காலை வரையான நிலவரத்தின் படி சமனல வாவியின் மொத்த நீர்மட்டம் 13 வீதமாக பதிவாகியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்தளவான நீர் காணப்படுவதனால் நேற்று(07) வரை சமனல வாவியிலிருந்து மிகக் குறைந்த அளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

எனினும், பயிர்ச்செய்கைக்கு அதிகளவான நீரை விநியோகிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று(08) முதல் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்படவுள்ளது.

நீரை வெறுமனே திறந்து விடுவதால் எந்த பயனும் இல்லை என்பதை கருத்திற்கொண்டே, மின்சாரத்தை உற்பத்தி செய்தவாறு தண்ணீர் திறந்து விடப்படுமமென பொது முகாமையாளர் தெரிவித்தார். 

இதனிடையே, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக அவசர மின் கொள்வனவை மேற்கொள்ள நேரிடுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எதிர்காலத்தில் மின்சாரம் கொள்வனவு செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டார். 

100 மெகாவாட் மின்சாரம் அவசரமாக கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார். 

முன்னணி வங்கியாளர் கிளைவ் பொன்சேகா மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 1, 2023 முதல் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.

பொன்சேகாவின் விரிவான அனுபவம் மற்றும் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் அவரை மக்கள் வங்கியை அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்கித்துறையில் பெரும் அனுபவமிக்க கிளைவ் பொன்சேகா, இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் அங்கத்தவராவார், மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு கற்கை நிலையத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

2018 முதல் 2020 வரை முதனிலை வணிகர்கள் சங்கத்தின் தலைவராக பொன்சேகா கடமையாற்றிய காலத்தில், சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதோடு, நிதித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை முன்னெடுத்தார்.

தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு உட்பட பல குழுக்களில் அவரது தீவிர ஈடுபாடு, நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

அவர் தற்போது பீப்பள்ஸ் லீசிங்ரூபைனான்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் லீசிங் புராப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட் மற்றும் டுயமெயீயல (பிரைவேட்) லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பணியாற்றுகிறார்.

2002 இல் மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னர் அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்துள்ளார்.

நவம்பர் 2011 முதல் மக்கள் வங்கியில் பிரதிப் பொதுமுகாமையாளராகப் பணியாற்றிய அவர், அந்நிய செலாவணி நடவடிக்கைகள், முதனிலை வணிகர்கள் பிரிவு நடவடிக்கைகள், முதலீட்டு வங்கிப் பிரிவு மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர், இலங்கை ரூபாய் பணச்சந்தை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி பதவிக்கு சஜித் தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சஜித் பிரேமதாச இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என எவரேனும் கூறினால் அது கட்டுக்கதை எனத் தெரிவித்தார்.

பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றி அறிக்கையொன்றை வெளியிடத் தயார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானது என இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றது. சம்பவத்தில் அதனை இயக்கிய பொறியியலாளர் மற்றும் பயிற்சியாளர் மரணமடைந்தனர். 

அமைச்சரவையின் ஒற்றுமையை உடைத்து கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமைக்காக அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அமைச்சரவை கூட்டத்தில் மன்னிப்பு கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது கருத்துக்களை அமைச்சர் அங்கு முன்வைக்க உள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான ரொஷான் ரணசிங்கவுக்கும் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமையினால் அமைச்சர் ரணசிங்க அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd