பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
ஒரு சிறிய அமைச்சரவையை உள்ளடக்கிய புதிய ‘சர்வ கட்சி’ அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
புதிய அமைச்சரவையானது சகல கட்சிகளையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சர்வகட்சி அமைச்சரவையானது தேசிய நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் அதிகரித்த 12.5 Kg எரிவாயுவின் விலை உயர்வை அரசு நிராகரித்துள்ளது. இன்றுநள்ளிரவு முதல் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் முன்பு எரிவாயு விலை ரூ.5,175 ஆக உயரும் என்று அறிவித்திருந்தது. எனினும் தற்போது வழமையான விலையிலேயே விற்பனையாகும்.
நிதியமைச்சர் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்திய பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதுவரையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிப்பது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சாத்தியமான நிதிதிட்டத்தை முன்வைக்கும்வரை சர்வதேச நாணயநிதியத்தினால் இலங்கைக்கான துரித நிதி உதவியை வழங்க முடியாது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கான தீர்வுகளை பிரதமரும் ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திற்கும் மக்களிற்கும் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
113 பெரும்பான்மையுடன் அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது என தெரிவித்துள்ள அவர் 1977 ம் ஆண்டுடன் நிலைமையை ஒப்பிட்டுள்ளதுடன் 175 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்லாமல் அரசாங்கத்தினால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
- தமிழக இணைய செய்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு மன்னார் மாவட்டம் பேசாளை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பினி பெண், ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.
இதேபோல் வியாழக்கிழமை மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை வந்தடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது எனவே தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர் நகுஷன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை இடம்பெறாமை உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்புலத்தில், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் பெற்றுக்கொண்ட நட்சத்திர அதிகாரம் பொருந்தியவரா இருக்கின்றார் என்ற சந்தேகம் எழுவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது பேராயர் இதனை தெரிவித்தார்.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நேரமான காலை 8.45-இற்கு பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனை இடம்பெற்றது.
சர்வ மதத் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அப்பால் சென்ற பாரிய சதித்திட்டம் ஒன்று இருப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டார்.
ஒருதலைப்பட்சமாக ஒரு சில விடயங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியை நிராகரிப்பதாகவும் கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார்.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கிறது.
அதற்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நேற்று (21) மதியம் விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையில், கொவிட் - 19 நோய்ப் பரவல் உக்கிரமடைந்திருந்த போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் பொதுமக்களால் படையினருக்கு வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பில் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் எரிபொருள் விநியோகம் மற்றும் பொது மக்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் சில தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனால் பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்துச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இராணுவம் மற்றும் ஏனைய படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் புதன்கிழமை (20) பொது மக்கள் சிலர் தாமாகவே முன்வந்து வீதித்தடைகளை அகற்றுவதையும் அவதானிக்க முடிந்ததையிட்டு அதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.
அதனால் அண்மையில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கிய ஒத்துழைப்புக்களை போன்றே தற்போதைய நெருக்கடியின் போதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
அதனால் வீதி மறியல்களை தவிர்த்து பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முழுமையான ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக இராணுவத்தளபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார்.
அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார்.
எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இதன்போது குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆதரவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர். புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.
அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
" மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்."
- இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.
அத்துடன், ராஜபக்ச குடும்பமும் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்தார்.
" நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். அம்மா (ஶ்ரீமாவும்) அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் மகனைகூட அரசியலில் இறக்கவில்லை." - எனவும் சந்திரிக்கா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரங்களை நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் பாரிய அரசியல் ஸ்திரமின்மை நிலவி வருவதாகவும், தற்போது அமர்ந்துள்ள 11 எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்களில் பலர் கோரி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியில்.
பதவி விலகல் இருந்தால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வேறு சிலர் கூறுகின்றனர்.
அண்மைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும், பிரதமருடன் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்கவில்லை. அமைச்சரவையில் பல மூத்த அமைச்சர்களை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார், ஆனால் ஜனாதிபதி எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தி நாட்டை இளம் மற்றும் புதிய அமைச்சரவைக்கு மீட்டெடுப்பார் என நம்புவதாகக் கூறினார்.
இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் தயாராகி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இரண்டு நாள் கலந்துரையாடலையும் முன்மொழிந்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்த பிரேரணைகள் தொடர்பில் இன்றும் நாளையும் கட்சித் தலைவர்கள் கூடி கலந்துரையாடவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் வெள்ளிக்கிழமைக்குள் ஜனாதிபதிக்கு அறிவிப்பார், ஜனாதிபதி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.