இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளவென எதிர்வரும் 30ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மார்ச் 30 ஆம் திகதி கொழும்பு வரும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 31 ம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி அங்கு ஈழத் தமிழர்களை சந்தித்து இந்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் கூறியதாவது:-
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல்.
அதுபோன்று ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதலுக்கு இலக்குகள் என்பதே மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். ரஷியாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து பேர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கூட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் பரப்பப்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் குழுவை சந்தித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அவரை வரவேற்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நிதியமைச்சர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன், இதன் போது விஜயம் தொடர்பான ஆரம்ப உடன்பாடுகள் எட்டப்பட்டன.
மக்கள் விரைவில் பயிர்ச் செய்கை யுத்தத்தை ஆரம்பிக்காவிடின் நிலைமை மிகவும் மோசமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அவதியுறுவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் நாடு சோகத்தை நெருங்கி வருவதாகவும் வாழ்க்கைச் செலவை தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை 500% அதிகரிப்பதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சு ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பல வகைகளின் கீழ் இந்த விலை அதிகரிப்பு முன்மொழியப்பட்டதாகவும், அதிக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு இவ்வளவு அதிக மின் அதிகரிப்பை முன்மொழியவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் நபர்களுக்கு 500% மின்சார கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொலைக்காட்சி நாடகங்களில் உதவி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை வைத்து நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று மினுவாங்கொடை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
விபச்சார விடுதியில் இருந்து நாடக நடிகை மற்றும் அவரது முகாமையாளர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
தற்போது ஒளிபரப்பாகும் இரண்டு பிரபல தொலைக்காட்சி நாடகங்களில் கூடுதல் வேடங்களில் நடித்த பல இளம் பெண்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல நாடகங்கள் இரண்டிலும் கூடுதல் வேடத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் நடிகைகளை அழைத்து வந்து தலா ரூ.60,000 வீதம் பல்வேறு நபர்களுக்கு பாலியல் ரீதியாக விற்பனை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 18,000 மில்லியனுக்கும் அதிகமான நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் போனஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் 5200 ஊழியர்களுக்கு மும்மடங்கு போனஸ் வழங்க கூட்டுத்தாபனம் ரூ.1560 மில்லியன் செலவிட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையினால் 2008ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 8 மில்லியன் ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் அதிகாரிகளது அனுமதியின்றி, அப்போதைய தலைவரினால் அந்த கெப் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இவ்வாறு தலைவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனம், அன்று முதல் இன்று வரை காணாமல் போயுள்ளதாக கோப் குழு முன்னிலையில் உறுதியாகியுள்ளது.
இந்த வாகனம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட முழுமையான நட்டம், 26 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவே, அப்போதைய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றியிருந்தமையும் உறுதியாகியுள்ளது.
இந்த வாகனம் தொடர்பிலான ஆவணங்கள் அனைத்தும், தேசிய லொத்தர் சபை வசம் காணப்படுவதாக தெரிவித்த சபையின் அதிகாரிகள், வாகனமே காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்த வாகனத்திற்கு பணம் செலுத்தாமையினால், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனம், தேசிய லொத்தர் சபைக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பில், பணத்தை செலுத்துமாறு நீதிமன்றத்தினால், தேசிய லொத்தர் சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தின் பெறுமதி 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா என்பதுடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் 68 லட்சத்து 28 ஆயிரத்து 360 ரூபா 83 சதம் வட்டி அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன், யுனேட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் சட்டத்தரணிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, தேசிய லொத்தர் சபை 16 லட்சத்து 74 ஆயிரத்து 185 ரூபா சட்டத்தரணிக்கான கட்டணமாக செலுத்தியுள்ளது.
இந்த அனைத்து தொகையும் உள்ளடங்கிய வகையிலேயே 16 மில்லியன் ரூபா கணிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை, கோப் குழு முன்னிலையில் அறிவித்தது.
எனினும், குறித்த வாகனம், தேசிய லொத்தர் சபையின் பயன்பாட்டிற்கு எடுக்கப்படவில்லை எனவும் கோப் குழு முன்னிலையில் தெரிய வந்தது.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரண குணவர்தன இந்த வாகனத்தை பொறுப்பேற்றுள்ளதுடன், 2008ம் ஆண்டு மே மாதம் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன கெப் வாகனத்துடன், இரண்டு வாகனங்களை அவர் பயன்படுத்தியுள்ளதாக தேசிய லொத்தர் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், காணாமல் போன வாகனம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியாது என லொத்தர் சபை அதிகாரிகள், கோப் குழுவிடம் கூறியுள்ளார்.