இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படை கப்பல் 'வஜ்ரா' ரோந்து பணியில் ஈடுபட்ட போது கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.
இலங்கையின் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களை இன்று 10ம் தேதி காலை துாத்துக்குடி கொண்டு வருகின்றனர். மத்திய உளவுப் பிரிவு விசாரணைக்கு பிறகு துாத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் ஒப்படைக்கப்படுவர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் ஶ்ரீலசுதந்சதிசரகட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வகட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.
நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்பிரகாரமே சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இன்று (09) நள்ளிரவு முதல் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சைப் பழம், அப்பிள் உட்பட பழவகைகள், சொக்கலேட் உட்பட பால் உற்பத்திகள், நூடுல்ஸ் வகைகள், பழச்சாறுகள், தண்ணீர், பியர், வைன் வகைகள், சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு வகைகள் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், டயர்கள், செருப்பு மற்றும் சப்பாத்துகள், இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கே தடை விதிக்கப்படவுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை திங்கட்கிழமை (06) அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.
இதற்கான அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் லீற்றர் ஒன்றின் நட்டம் 88 ரூபாவாக உள்ளதாகவும் எனவே டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தாம் பெறும் வருமானத்திற்கு ஏற்ப விலைவாசி உயர்வை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு காரணமாக மதுசார உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாராயம் உட்பட 23 கலால் அனுமதி பெற்ற மதுபான உற்பத்திகள் உள்நாட்டில் குறைவின்றி காணப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
அவற்றிற்குத் தேவையான மதுசாரம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இன்னும் உள்ளூர் சந்தையில் கிடைப்பதாக அவர் கூறினார்.
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளை அடிப்படையாக வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது அதில் ஒரு அமைச்சு மற்றும் இரு இராஜாங்க அமைச்சுகளின் பொறுப்புகள் மீண்டும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
வன பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் மற்றும் அரச மர கூட்டுத்தாபனம் ஆகியன வனஜீவராசிகள் மற்றும் வன வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பதிவாளர் நாயகம் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், தேசிய பாதுகாப்பு நிதியம், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் நமக்காக நாம் நிதியம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக புதிய வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர்முகாமைத்துவ நிலையம், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை, தேசிய இடர் நிவாரண சேவை, வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆகியன இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ. பாலித்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏசியன் மிரருக்கு கிடைக்கும் செய்தியின்படி, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உணவு விடுதியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிச்சாலையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
திரவ பால் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று (8) காலை உணவகத்தில் குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மாத காலமாக விநியோகஸ்தர்கள் பாராளுமன்றத்திற்கு திரவ பாலை வழங்கவில்லை என பாராளுமன்ற உணவு விநியோக பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மில்கோ நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும் போதிய பால் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில போத்தலில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில உணவுப் பொருட்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் நேற்று அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் உரித்தாகும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக விசேட கடமைக்காக செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடமைகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதால் தூர இடங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களை முடிந்தளவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பதவி விலகும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் இருந்ததால் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாமாக முன்வந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நீக்கம் செய்துள்ளதால் ஆட்சியை தக்க வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்கள் எதிரிகள் அல்ல என்றும், பொறுமையாக பணியாற்ற வேண்டும் என்றும், அரசியல் சகிப்புத்தன்மை குறித்து பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.