web log free
November 18, 2025
kumar

kumar

பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

அதன்படி இன்று பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று காலை இடம்பெறும் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11 சுயேட்சை உறுப்பினர்களும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பியர் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன

நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தலங்கம பொலிஸ், மிரிஹானவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், சட்டமா அதிபர் திணைக் களம் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக உத்தரவைப் பெற முயற்சித்ததாக சட்டத்தரணி கமல் விஜேசேகர தெரிவித்தார்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான சிறப்புரிமையை மீறுவதாக பொலிஸார் தெரிவித்ததாகவும், இது நிகழ்வுகளுக்கு தவறான வியாக்கியானம் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்ததாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாணந்துறை வடக்கு, கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
 
சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
பள்ளியின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன், வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
 
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு வாரங்கள் வரை விலை திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC (LIOC) ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகளை இணையான விலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.எனவே, இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் கையளிக்கப்படும் என்றார்.

ஒரு வெளிப்படையான எரிபொருள் விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்களின் தோள்களில் சுமையை விட்டுவிடாமல் டொலர் சந்தைக்கு ஏற்ப CPC மற்றும் LIOC இரண்டின் விலைகளையும் பாதிக்கும் என்றார்.

சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் தவறாக நடக்க வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு இணங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் தொடர்பில் ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது.

88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.

10-ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

87 சதவீதம் பேர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி கருத்து தெரிவித்தவர்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர்.

எனவே, பொருளாதார சிக்கல்களில் இருந்து தங்களை மீட்க ராஜபக்ஷ குடும்பத்தால் முடியாது என்று அனைத்து இனத்தினரும் கருதுவது தெரிய வந்துள்ளது.

 

58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் மட்டும், விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

 

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதம் பேர் கூறினர். 96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

4,100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும் என அவர் கூறினார்.

சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதாகவும், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனம் நடேசனுக்கு சொந்தமானது என்றும், ROOD இன்டர்நேஷனல் நிறுவனம், கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கிக்கு நிதியை மாற்றியதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்தக் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட பணத்தில் மல்வானையில் உள்ள பிரபல சொத்துக்களை கொள்வனவு செய்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊழல் பயில்களும் தம்மிடம் உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் அதன் அங்கத்தவர்களாக இருந்தவர்களில் ஊழல் மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்தும் ஜேவிபியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, கடந்த காலத்தில் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த தருணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த பயில் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள அவர், அதில் ஒரு பயிலில் பாரியளவில் எரிபொருள் நிரப்புவதில் இடம்பெற்றுள்ள மில்லியன் கணக்கான மோசடிகள் தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் அதுதொடர்பிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd