கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரையின் ஊடாக அமைச்சர் தனது பதவி இராஜினாமா அறிவிப்பை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வௌியிட்டதால் கம்மன்பில விரக்தியுடன் வௌியேறியதாக அறியமுடிகிறது.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது.
கடுமையான அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2ம் திகதி கையெழுத்திட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரிஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பீரிஸின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செயலகங்களை அதிகரிப்பது தொடர்பாக எற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மலையக பகுதிகளில் நடைமுறைபடுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை.
ஆனால் பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற காலியில் அதனை உடனடியாக நடைமுறைபடுத்தி அதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ள அரசாங்கம் மலையக மக்களை மறந்து செயற்படுவதை காண முடிகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியேறிய வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி மனோகணேசன் திகாம்பரம் வேலுகுமார் மற்றும் என்னுடைய ஒத்துழைப்புடனும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமே பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்பது.இதற்கு யாரும் தனியாக உரிமை கோரவோ அல்லது நான் தான் செய்தேன் என்று சொல்லவோ முடியாது.
நாங்கள் ஒற்றுமையாக தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த வெற்றியை எங்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது.எனவே இது ஒரு கூட்டு பொறுப்பாக செயற்பட்டதன் காரணமாகவே சாத்தியமானது.வெறுமனே நானோ அல்லது வேறு யாருமோ நினைத்திருந்தால் இதனை சாதித்திருக்க முடியாது.இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று (07.02.2022) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நான் இது தொடர்பாக உரையாற்றிய பொழுது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க அதனை ஏற்றுக் கொண்டதுடன் அதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் இந்த விடயம் தொடர்பாக எல்லா இடங்களிலும் குரல் கொடுத்து வருகின்றோம். மலையகத்தில் கையெழுத்து திரட்டி சாதித்த விடயம் எதுவும் இல்லை.எனவே இதனை பாராளுமன்றத்திலும் மாவட்ட அபிவிருத்தி குழுவிலும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பதன் மூலமே சாதிக்க முடியும்.
ஏதிர்வருகின்ற பாராளுமன்றத்திலும் இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் உட்பட அனைவரும் அலுத்தம் கொடுப்போம்.பிரதேச செயலகங்கள் அதிகரிப்பதன் மூலமாக எங்களுடைய அபிவிருத்தி அதிகரிக்கும் கிராம சேவகர் பிரிவு அதிகரிக்கப்பட்டால் எங்களுக்கான நிதி அதிகரிக்கும் இப்படி பல நன்மைகளை எங்களுடைய மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.ஆனால் இந்த அரசாங்கம் எங்களுடைய அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகளும் இது தொடர்பாக அலுத்தம் கொடுக்க வேண்டும்.அதனை விடுத்து உப பிரதேச செயலகங்களை திறந்து வைப்பதை நிறுத்திவிட்டு வர்த்தமாணியில் குறிப்பிட்டுள்ளது போல பிரதேச செயலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காhலி மாவட்டத்தில் 1063334 பேர் இருக்கின்றார்கள் அங்கே 22 செயலக பிரிவு இருக்கின்றது.வெலிவிடிய பிரதேச செயலக பிரிவில் மக்கள் தொகை 29347 கோணபீனுவல பிரதேச செயலகத்தில் மக்கள் தொகை 21755 ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் 768000 அதிகமான மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் எங்களுக்கு இருப்பதோ 5 மாத்திரமே.
அதிலும் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் தொகை 220000 அதிகமானது எனவே இது எங்களுடைய மாவட்டத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.இதற்காக மாவட்டத்தின் அனைவரும் அதாவது சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.இது வெறுமனே சிறுபான்மை தமிழர்களின் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவான ஒரு விடயமாக கருதி அரசாங்கம் செயற்பட வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த புனித உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நபரிடமும் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இந்த பிரபஞ்சத்தில் காதலை ஒரு முறையாவது அனுபவிக்காத உயிரினமே இருக்காது.
உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காதலர்களும் காத்திருக்கும் ஒரு நாள் இந்த காதலர் தினம். காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டும் அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது.
பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம் : Rose Day
அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், பிப்ரவரி 7ம் தேதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.
பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம் : Propose Day
காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்: Choclate day
உங்கள் உறவில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.
பிப்ரவரி 10 - டெட்டி டே :teddy Day
பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் (டெட்டி பியர்) விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம்.
பிப்ரவரி 11 - Promise Day வாக்குறுதி தினம் : இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது.
பிப்ரவரி 12 - முத்த தினம் : kiss Day
காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள்.
பிப்ரவரி 13 - அணைத்தல் தினம் : Hug Day
தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைத்தானே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கொண்டாடும் தினம் தான் இது.
பிப்ரவரி 14 - காதலர் தினம் : Valantiens Day
இன்றைய தினம் எல்லாவற்றுக்கும் மேலான காதலர் தினம். இதைத்தான் இன்று உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த மாத கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் பெற்றோல் 07 ரூபாவிற்கும் நஷ்டம் அடைவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இதனை முடிந்தவரை தாங்கிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடல்கள் பாடியுள்ளார். 1952-ம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘ஆன்’ தமிழில் ‘ஆன் முரட்டு அடியாள்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் லதாமங்கேஷ்கர் 4 பாடல்களை பாடி இருந்தார். 1955-ம் ஆண்டு இந்தி படமான ‘உரன் கடோலா’ தமிழில் ‘வன ரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை பாடி இருந்தார்.
அதன்பின் 1987-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் நேரடியாக தமிழ் படத்தில் பாடல்கள் பாடினார். இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் பிரபலமானது. 1988-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை....கலகலவென’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடினார். அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடி இருந்தார்.
தமிழில் லதா மங்கேஷ்கர் நேரடியாக பாடிய பாடல்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். இந்தியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல்வேறு படங்களில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோல் 184 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ஒரு லீட்டர் டீசலின் விலையும் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 124 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.