web log free
November 19, 2025
kumar

kumar

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லமாட்டார் என அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

‘என் அப்பா பாதுகாப்பாக இருக்கிறார். அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்கிறார், ”என்று அவர் கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் மொட்டு கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானை வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மல்வானை பிரதேச மக்கள் பசில் ராஜபக்சவின் வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள்ளனர். 

நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மத்திய வங்கியின் ஆளுநருடன் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதச விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமரட்ன, கபீர் ஹாசிம் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். 

 

நாட்டை விட்டு வெளியேற தயாராகி வரும் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பிடிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் சரக்கு வீதிக்கு அருகில் வாகன சாரதிகளை பரிசோதிப்பதற்காக மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தின் நுழைவாயில்களிலும் மக்கள் சோதனையிட்டு வருகின்றனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் உணவகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று அரச தரப்பினர் பலரது வீடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்த 218 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பயணித்த வாகனம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எம்பிக்கு சிறிய காயங்கள் மட்டுமே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இன்று மாலை 7 மணி முதல் நாளை (10) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்றைய தினம் நடந்த வன்முறைக்கு  முழுக் காரணம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் பல பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில் தற்போது காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொது மக்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து ஆவேசமடைந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளில் அரசியல்வாதிகளின் இல்லங்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

அத்துடன் தற்போது அலரி மாளிகைக்குள்ளும் இவர்கள் நுழைய முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே கடும் கோபத்திலிருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd