மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பில் அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா, எஸ். அமரசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் குழுவில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபையைக் கூட்டி புதிய கூட்டணிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் இந்த விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மொட்டுவிலுள்ள பெருமளவிலான தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியின் வேலைத்திட்டத்தில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பல இடங்களில் இன்று (11) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பதுளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இந்த வாரத்திற்குள் ஆளும் கட்சி ஆசனங்களில் இருந்து அகற்றப்படும் என பாராளுமன்ற பிரதம சார்ஜன்ட் நரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அஹமட் அவர்களினால் காலியான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரவுள்ள அலிஸாஹிர் மௌலானாவுக்கு எதிர்க்கட்சி ஆசனம் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அலிஸாஹிர் மவ்லானா கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி சமகி ஜன பலவேகயவின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களின் பட்டியலில் அதிக வாக்குகளைப் பெற்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து.நஸீர் அஹமட் நீக்கப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, அதற்கு பொருத்தமான வேட்பாளர் யார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதுடன், உரியவரின் பெயர் குறிப்பிடப்பட்டவுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (10) தெரிவித்தார்.
கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பிறகு, ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்
பாராளுமன்ற குழுக்களில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை சில அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்தும் புறக்கணிப்பதாக குழுக்களின் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானித்துள்ளனர்.
மக்களின் தேவைக்கு ஏற்ப உரிய குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை எவ்வித அடிப்படையுமின்றி இந்த அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் CT ஸ்கேன் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களாக CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் அதன் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதேவேளை, CT ஸ்கேன் இயந்திரத்தின் மின்கல அமைப்பிற்கு மாற்று முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, சில தினங்களில் இயந்திரத்தை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஹொரோவபதானை பிரதான வீதியின் கோவில்குளம் பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குச் சொந்தமான டிஃபென்டர் வாகனம் மடுகந்தையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கோவில்குளம் பகுதியில் திரிந்த மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரதான வீதியில் கடந்த காலங்களில் வீதி உலா வருபவர்கள் வாகனங்களை நிறுத்தாததன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்ட போதும், மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகளோ, மாடுகளின் உரிமையாளர்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 38778 பிரதீபன் மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 27287 மதுஷங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த ஐந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் மோதல் காரணமாக இந்நிலை ஏற்படலாம் என்று ஜனாதிபதி கூறினார்.
இந்த முரண்பாடுகள் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியானது உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்கம் குறித்து கவனத்தை ஈர்த்து, ஆபிரிக்க ஒன்றியத்தின் முன்மொழிவின் பிரகாரம் இந்தப் பகைமைகளை உடனடியாக நிறுத்துமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவர்களை ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வெளிவிவகார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பில் தான் அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டக் கல்லூரியில் மூத்த பயிற்சியாளராக, இலங்கையில் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடைமுறையில் பாராட்டத்தக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார். பல மூத்த அரசாங்க பதவிகளை வகித்துள்ளார்.
இதற்கு முன்னர் சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகார சபையின் தலைவராகவும் விளையாட்டு அமைச்சின் சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் சட்ட ஆலோசகராகவும், சுற்றுலா ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும்.