web log free
May 07, 2025
kumar

kumar

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் முன்னாள் இராணுவ கமாண்டர் ஆவார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வாறானதொரு நடவடிக்கையின் போது ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ கமாண்டோ உயிரிழந்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வசிக்கும் மாணவன் ஒருவரைக் காணவில்லை, அவரது கையடக்கத் தொலைபேசி சில நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனின் பெற்றோர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வந்து அவர் குறித்து விசாரித்துச் சென்றனர்.

ஆனால், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தெரிந்துகொள்ள முடியாததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே குறித்த மாணவன் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

எவ்வாறாயினும், அவருடன் இருந்த நண்பர்களுக்கும் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரபல ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத நம்பிக்கைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான அறிக்கையை இறுதி செய்வதற்கு ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த ஆணைக்குழு பல தடவைகள் நீடிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரதூரமான மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை விசாரிப்பதற்காக 2021 ஜனவரி 21 அன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆணைக்குழு தலைவராக உள்ளார்.

ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

கொழும்பில் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேருந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது.

விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம் சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த (02) ஆம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான கடற்றொழிலாளர்களுக்கு இரு கட்டங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன.

15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் 29,057 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா மற்றும் இலங்கைக் சீனத்தூதுவர் கீ ங்ஹொங் (Qi Shenhong) ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

சீனக் குடியரசினால் உதவி அடிப்படையில் 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதுடன் அதன் சந்தைப் பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும்.

அதன் பிரகாரம் முதல் கட்டத்தில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, தங்காலை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் வெளிப்புறம் இயந்திரம் பொருத்தப்பட்ட 24,341 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு 96 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டதுடன் முதல் கட்டத்தில் படகொன்றுக்கு தலா 75 லீற்றர் அடிப்படையில் 1,825,575 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் படகொன்றுக்கு 78 லீற்றர் வீதம் வழங்கப்படுவதுடன் ஒரு மீன்படகிற்கு 37,026 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களிலுள்ள 97 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன. இவ் எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் 60 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பு 405, களுத்துறை 455, காலி 816, மாத்தறை 1057, அம்பாந்தோட.டை, 1050, கல்முனை 1129, மட்டக்களப்பு 1851, திருகோணமலை 3937, கிளிநொச்சி 1169, யாழ்ப்பாணம் 5952, மன்னார் 3070, முல்லைத்தீவு 1523, புத்தளம் 3145, சிலாபம் 1993, கம்பஹா 1565, என்ற அடிப்படையில் 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, 29057 மீன்பிடிப் படகுகளுக்கு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் மண்ணெண்ணெய் கிடைக்காத படகு உரிமையாளர்களின் கோரிக்கைகளின் பிரகாரம் இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்று பொலிசார் கூறுகின்றனர்.

மத்துகம டிப்போவிற்கு சொந்தமான இந்த பஸ் தெனியாவில் இருந்து கொழும்பு வந்து மீண்டும் தெனியாவிற்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து, பொலிஸார், ராணுவம் மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் இணைந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  

காயடைந்த மேலும் நால்வர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

பாராளுமன்றத்தில் இன்று (06) காலை வேளையில் ஏற்பட்ட கடும் அமளி துமளி காரணமாக சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இந்த விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பேரூந்து கொழும்பு-தெனியாய பேருந்து ஆகும்.

விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரிடம் இருந்து சுமார் 144 கோடி ரூபாவை மோசடி செய்ததாக பிரபல  கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் மீது 10 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் 07 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

நேற்று (05) திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகிய குற்றஞ்சாட்டப்பட்ட  பிரையன் தோமஸ், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாம் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தொடர்ந்தனர். கொழும்பு பல்மைரா அவென்யூ 25 இல் வசிக்கும் பிரையன் தோமஸ் மீது இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2017 முதல் 20 முறை, நூற்று நாற்பத்து மூன்று கோடி எழுபத்து மூன்று லட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து அறுநூற்று அறுபத்து ஐந்து (ரூ. 1,437, 358, 665/) ரூபாவை 39, மல்பாறை, கொழும்பு 07 என்ற முகவரியில் வசிக்கும் தினேஷ் ஷாப்டரிடம் இருந்து 20 காசோலைகளில் பெறப்பட்ட பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd