எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை உடைத்து, ஜனாதிபதியின் கழுத்தைப் பிடித்து வெளியே வீச வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்சக்கள் ஸ்ரீ பாதத்தில் மணியை அகற்றி விற்று, பன்னிரு மகாபஹனை விற்று, பெரிய பகோடாக்களின் பொக்கிஷங்களை எடுத்து, அதமஸ்தானத்தை வணங்கி, ஏலார பயன்படுத்திய தங்க வண்டியை திருடி, பிரபாகரன் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகவும்
பெற்றோல் 95 ஒக்டேன் லீற்றர் 100 ரூபாவினாலும்,
ஆட்டோ டீசல் லீற்றர் 60 ரூபாவினாலும்,
சுப்பர் டீசல் லீற்றர் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் ஒக்டேன் 92 இன் புதிய விலை ரூபா. 470 மற்றும் ஆக்டேன் 95 ரூ. 550
ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை ரூ. 460 மற்றும் சூப்பர் டீசல் லிட்டர் ரூ. 520.
இதற்கிடையில், LIOC எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது, இப்போது CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் விலைகள் சமமாக உள்ளன.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்குவது என எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு பின்னர், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலான ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளதுடன் கட்சியின் அதிகாரிகள் எவரும் அதில் கலந்துக்கொள்ளவில்லை.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என இந்த சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை சேர்ந்த சில உறுப்பினர்கள் அமைச்சர்களை கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு கடுமையான அழுத்தங்களை கொடுத்ததால், அவர்களை நீக்கிய போதிலும் பிளவுப்படவுள்ள கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பதற்காக அவர்கள் வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்கி, கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சி அறிவித்திருந்தது
இதற்கு எதிராக அமைச்சர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் நீதிமன்றம் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி உத்தரவிட்டது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை ஊழல் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்ததையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தனி நபரை போக்குவரத்து சட்டத்திற்கு முரணாக பிரதித் தலைவராக நியமித்து அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்துமூல அனுமதியுடன் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான உரிமையை தமக்கென ஒதுக்கி இந்த வழக்கை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வெல்கம 2010 ஜூன் 23 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய போது, எல்.ஏ.விமலரத்னவை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவராக நியமித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல் நேற்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வழங்குனர்களால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கப்பலின் வருகை மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக எரிசக்தி அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
காட்டில் தன்னைத் துரத்தி வந்த பெரிய கரடி ஒன்றிடமிருந்து தப்புவதற்காக இளைஞர் ஒருவர் ஓடிச் சென்று மரத்தில் ஏறியுள்ளார்.
ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அக்கரடி அங்கிருந்து செல்லும் வரை மூன்று நாட்களை மரத்திலேயே கழித்த அந்த இளைஞரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இரண்டு நாட்கள் தேடுதல் மேற்கொண்டு நண்பகல் வேளையில் கண்டுபிடித்துள்ளார்கள்.
இவ்வாறு காட்டில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டவர் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 10 ஆம் கொலனியைச் சேர்ந்த சாகுல் ரிஸ்வான் எனப்படும் 22 வயது திருமணமான இளைஞராவார்.
தம்பலகாமம் ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மாடுகளை வளர்க்கும் தனது மைத்துனர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக கடந்த 16 ஆம் திகதி காலை காட்டின் வழியே பயணம் செய்கையில் அவர் இவ்வாறான சம்பவமொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த இளைஞர் காட்டில் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி கடந்த 17ஆம் திகதி தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அங்கு கடமையாற்றும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நாக்காலந்த முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ முகாமுக்கு பொறுப்பான கேர்ணல் ராஜகுருவை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை கோரினார்.
வனவிலங்கு பிரிவினரையும், கிராமத்து மக்களையும் இணைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை அவர் மேற்கொண்டார். அன்று இரவு வரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவ்வாறு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் யானை மற்றும் கரடிகளின் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்தார்கள். அவற்றை விரட்டியக்க வனவிலங்கு பிரிவினர் நடவடிக்கை எடுத்தார்கள்.
மறுநாளும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு அதற்காக மேலதிக படையணியினரும் கிராமத்தினருடன் இணைந்து கொண்டார்கள். அன்று பகல் காணாமல் போயிருந்த இளைஞர் குட்டையொன்றில் நீர் அருந்தும் போது கிராமத்தவர்களும் மற்றும் இராணுவத்தினரும் கண்டுள்ளார்கள்.பின்னர் அவரின் அருகில் சென்று அவரை மீட்டுள்ளார்கள்.
அவரின் உடம்பில் கீறல்கள் மாத்திரமே காணப்பட்டதாகவும் வேறு எதுவித காயங்களும் காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞன் பின்னர் தான் முகம் கொடுத்த சம்பவம் பற்றி இவ்வாறு விவரித்தார்.
"நான் எனது மைத்துனருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த பின்னர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆயத்தமானேன். நான் காட்டில் நடந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய கரடி ஒன்றைக் கண்டேன். அது என்னைப் பார்த்தவுடன் என்னை துரத்தத் தொடங்கியது. நான் அதனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஓடினேன். எவ்வளவு தூரம் ஓடினேன் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை.
நான் நன்றாகப் பயந்திருந்தேன். அதன் பின்னர் ஒரு பெரிய மரத்தில் ஏறிக் கொண்டேன். இரவு முழுவதும் மரத்திலேயே இருந்தேன், தூங்கவில்லை. அடுத்தநாள் இறங்கி பாதையை தேடிக் கொண்டு வந்தேன். நான் தொடர்ந்தும் காட்டுக்குள்ளேயே சென்றுள்ளேன். தொலைபேசிக்கும் 'சிக்னல்' கிடைக்கவில்லை. எனக்கு 'சிக்னல்' கிடைத்த போது நான் தகவலை வீட்டாரிடம் கூறினேன். பின்னர் தொலைபேசியை நிறுத்தி வைத்துக் கொண்டேன்.
காட்டில் பழங்களை உண்டு, அன்று இரவும் ஒரு குட்டையில் நீரை அருந்து விட்டு மரத்தில் ஏறி இருந்து கொண்டேன். அன்றைய இரவையும் மிகுந்த பயத்துடன் மரத்திலேயே கழித்தேன். எந்தவித வெளிச்சமும் இருக்கவில்லை.
எனது மரத்தைச் சுற்றி மிருகங்களின் சத்தமே கேட்டது. காலையில் நான் அருகிலிருந்த குட்டையில் நீர் அருந்தும் போது கிராமத்து மக்களையும் இராணுவத்தையும் கண்டேன். என்னை கிராமத்துக்கு அழைத்து வந்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்".
இவ்வாறு அந்த இளைஞர் விபரித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி தம்பலகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல கூறியதாவது:
"இந்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடு கிடைத்தவுடன், நான் எனது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இராணுவம் மற்றும் வனவிலங்கு பிரிவினர் சிலருடன் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இளைஞரைக் கண்டுபிடித்தோம்.
கரடி துரத்திய வேளையில் அந்த இளைஞர் கிராமத்துப் பக்கம் ஓடாமல் எதிர்த்திசையில் ஓடியே காட்டுக்குள் வெகுதூரம் சென்று காணாமல் போயுள்ளார். இவரை குளத்துப் பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அனுராதபுரம் மாவட்ட எல்லையில் கண்டுபிடித்தோம். தற்போது காடுகளில் தேன் உள்ளது. அதனை உட்கொள்வதற்காக கரடிகள் வருவதுண்டு.
இந்தக் காட்டுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாடு வளர்ப்பவர்கள் அவற்றை மேய்ப்பதற்காக காட்டிற்குள் செல்கிறார்கள். வனவிலங்கு அதிகாரிகள் அதற்குத் தடை சொல்வதில்லை. நான் கிராமத்தவர்களுக்கு காட்டுக்குள் அநாவசியமாக நுழைய வேண்டாம் எனக் கூறுகின்றேன்.
அத்துடன் இந்த நடவடிக்கையில் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராமத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்".
இவ்வாறு பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல தெரிவித்தார்.