எதிர்வரும் ஓராண்டு காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தாலும் கடந்த காலத்தை விட விவசாயிகள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
டிசெம்பர் இறுதிக்குள் லானா எனப்படும் இயற்கையான காலநிலை நிலவும் என சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும், எனவே நீரை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4வின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செனல் 4 அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும் தெரிவுக்குழு நியமனம் தொடர்பான முன்னேற்றம் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மொத்தம் 311 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையில் ரூ. 36.8 மில்லியன் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் காணப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், வட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இருவர் வெட்டுக்காயங்கள் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நெருக்கடி தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வாவினால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் மற்றும் கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் அனைத்து அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கிய தேநீர் விருந்தை சமகி ஜன பலவேக மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன புறக்கணித்துள்ளன.
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை சபை உணவக மண்டபத்தில் அனைவருக்கும் விசேட மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் விசேட மதிய உணவை மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்டமையும் விசேட அம்சமாகும்.
அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பும் மாதாந்திர ஓய்வூதியம் 2,500 ஆகவும் உயர்த்தப்படும் என ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் உள்ள றைகம பெருந்தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் இன ரீதியாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இவர்களின் தொடர் அச்சுறுத்தலுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் இப்பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வந்ததது.
இந்நிலையில், பெரும்பான்மை இனத்தவரின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், றைகம தோட்டத்திற்கு இன்று விஜயம் செய்த செந்தில் தொண்டமான், கேக் வெட்டி, பாட்டசு வெடித்து றைகம தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்.
மேலும் அம்மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, செந்தில் தொண்டமான் உத்தரவிட்டார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் தலைமைகள் தமது தோட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில், தமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் எங்களுடன் இணைந்து அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று தந்தது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மாத்திரமே என்று அத்தோட்ட மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.