ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரதி வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து நிறுவனங்களையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ், முப்படையினர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வௌ்ளிக்கிழமைகளில் காலையில் இரண்டு மணித்தியாலத்தையாவது சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளுக்காக ஒதுக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.
தேயிலை மலையில் புலியின் தாக்குதலுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி ஒருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவரை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி இன்று (24) தாக்கியுள்ளது.
புலியை காப்புக்காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நல்லதன்னிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்கள் தோட்டத் தொழிலாளர்களுடன் தேயிலைத் தோட்டத்திற்கு வருவதுடன், தேயிலைத் தோட்டத்திற்கு நாய்களை வேட்டையாட வரும் புலிகள் வேட்டையாடுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களைத் தாக்கி காயப்படுத்துவதாக நல்லதண்ணியா வனவிலங்கு அலுவலகம் தெரிவிக்கிறது.
3 கிலோ 397 கிராம் தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ.7.5 மில்லியன் தண்ட பணம் விதிக்கப்பட்டதுடன் தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுச் செயலாளர் தன்னை தாக்கியதாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தாம் தாக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல எதிர்க்கட்சிகள் வாக்களிக்கத் தயாராகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதும் கூட, அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் பாராளுமன்ற கூட்டத்திற்கு கட்டாயம் கலந்து கொள்ளுமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகத்தினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உட்பட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தலைவர் ஜானக ரத்நாயக்க நீக்கப்படுவது தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் நடைபெறவுள்ளது.
சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எம்.பி.யின் பையில் இருந்த மொபைல் போன்களை சுங்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு 91 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் உத்தியோகபூர்வ களத்தை "கம்பெனித் தெரு" என அழைப்பதற்கு அமைச்சர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தமிழில் "கம்பெனி வீதி" என்றும் ஆங்கிலத்தில் "ஸ்லேவ் ஐலன்ட் " என்றும் வெளியிடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகபூர்வ களத்தின் பெயரை மொழியிலிருந்தே "கம்பெனி தெரு" என்று அழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 01.12.1992 ஆம் இலக்க 743/5 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) அதிகாலை பயணமானார்.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் K.சண்முகம் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கான ஒரு நாள் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாளை(24) ஜப்பானுக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் Fumio Kishida உள்ளிட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பான் - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு பேரவை, ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபை மற்றும் ஜப்பான் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவற்றுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிடுகிறார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தான் பதவியில் இருக்கும் வரை போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை ஒழிக்க பாடுபடுவேன் என்றும், பணிபுரியவே பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, பின்னோக்கிச் செல்லாமல் மேலும் ஒரு அடியை முன்னோக்கி வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.