கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என சிரேஷ்ட விரிவுரையாளரும் உளவியலாளருமான டொக்டர் சத்துரி சுரவீர எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், 100,000 நபர்களுக்கு 17 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக (100,000:17) கூறினார்.
"துரதிர்ஷ்டவசமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தரவு எதுவும் பெறப்படவில்லை. இதுவரை நாங்கள் இந்த ஆண்டு நான்கு மாதங்கள் மட்டுமே செலவிட்டுள்ளோம், ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்குள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற தகவலைப் பெறுகிறோம்.
"இன்னும், ஆண்டுதோறும் 3,000 தற்கொலை வழக்குகள் பதிவாகின்றன, கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது சம்பவங்கள் தினசரி பதிவாகின்றன. தற்கொலை வழக்குகளில் படிப்படியாகக் குறைந்துள்ளது, ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இப்போது சிறிது அதிகரித்துள்ளது."
எனவே, தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வதையும், சட்டமா அதிபராக அவரது செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதையும் தடுத்து, பயங்கரவாத தடுப்பு பணியகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்காரணமாக வேலை செய்யும் இடங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதும், பொதுமக்கள் முடியுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பதும் சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ந்தும், வீட்டிலேயே இருக்குமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (24) பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மற்றும் அது தொடர்பான வாக்கெடுப்பு மற்றும் உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகள் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
X-Press Pearl கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம் கூறினார்.
அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் கடலில் 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களினால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதான சந்தேகநபர் இன்று(23) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 பெண்களும் இரு ஆண்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
5% - 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கே.ஹரிச்சந்திர பத்மசிறி குறிப்பிட்டார்.
அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது சந்தேகநபர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று (22) பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காசல் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் பேராசிரியர் சனத் லனாரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். பேராசிரியர் சனத் லனாரோலு மேலும் தெரிவிக்கையில்,
“கர்ப்பிணி தாய்மார்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் மதியம் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வழக்கமாக 2 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டால், சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அதீத வெப்பத்தால் நீங்கள் நீரிழப்புக்கு ஆளாகலாம்." என்றார்.