web log free
September 16, 2024
kumar

kumar

வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்றிரவு(18) 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி, சமகி ஜன பலவேகயவில் இணைந்துள்ளார்.

காலி மஹிந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியும் ஆவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் பிரவேசித்த அவர் முதலில் காலி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

லயனல் பிரேமசிறி 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்ததுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்க சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சேனாரத்ன, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தன்னைத் துரோகியாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை வழங்கியுள்ளதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு அமைய தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பத்து நிபந்தனைகளுக்கு ஏற்ப திட்டம் உருவாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிக்க பெரேரா மேலும் கூறியதாவது:

நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன என்றார். 

கட்டணம் இன்றி இலவச சிறப்பு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொசன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக இலவச விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹவ - அநுராதபுரம் பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் பணிகள் நிறைவடையாததால் பொசன் காலத்தில் புகையிரத சேவைகளை ஈடுபடுத்த முடியாது எனவும் அதற்கு பதிலாக 400 விசேட பஸ்கள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை புதிய குறுகிய தூர புகையிரத பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணமின்றி விசேட புகையிரதத்தை இயக்க தயார் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவார் என சண்டே டைம்ஸ் அரசியல் எழுத்தாளர் தெரிவிக்கிறார்.

சண்டே டைம்ஸ் செய்தியின்படி, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி கடிதம் அனுப்பவுள்ளார்.

ஜனாதிபதியால் விரைவில் முன்வைக்கப்படவுள்ள இந்தக் கோரிக்கைக்கு பொஹொட்டு கட்சி இணக்கம் தெரிவிக்கும் என சண்டே டைம்ஸின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்.

அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் தம்மிக்க பெரேராவை பிரதமராக நியமிக்கும் உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. 

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக ஊடகங்களைக் கையாள ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சண்டே டைம்ஸின் மேற்கண்ட கட்டுரை தெரிவிக்கிறது.

அந்த குழுவின் தலைவராக சாகல ரத்நாயக்க உள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பின்னர் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மாத்தறையில் முதலாவது மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறான மேலும் பல பாரிய கூட்டங்கள் ஜூலை 7, ஜூலை 14 மற்றும் ஜூலை 21 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பொது கூட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நடத்தப்படும் பேரணியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இணைந்துள்ளனர்.

இதன்படி, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு ஆதரவான மாத்தறை மாவட்ட மக்கள் மாத்திரமே இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவரது பயணத்தின் போது, தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதையும், இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் அவரது விஜயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சர்வதேச கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்நாள் மீன்பிடிக் கப்பலின் ஓட்டில் நான்கு உரப் பொதிகளில் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உர மூட்டைகளில் 100 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல நாள் மீன்பிடி படகு தற்போது காலி துறைமுகத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (14) விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.