பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேம்பியன் மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது பாடசாலை வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயதுடைய தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தாயார் கொழும்பில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாகவும், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது மகள் தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
பொகவந்தலா பொலிஸில் தாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவியை டிக்ஓயா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிரும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இழிவுபடுத்தும் பதிவுகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பல்வேறு போலி கணக்குகள் ஊடாக பதிவிடப்படும் அத்தகைய பதிவுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் தேர்தல் சட்டத்தின் கீழ் நீங்கள் குற்றவாளியாக இனங்காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடம் இதுவரையில் ஒரு இலட்சம் கோடி ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சுங்கத் திணைக்களத்தை சந்திக்க முடியும் எனவும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு நோக்கி பயணித்து இருப்பதாக அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு அமைச்சர், பிரதியமைச்சர்களை பதவி விலக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு பலர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது உள்ளே இருந்து செயல்படுவோரை உடனடியாக வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் மக்களுக்கான பணிகளுக்கு சிலர் முட்டுக்கட்டையாக இருந்த நிலையில் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரை ஜனாதிபதி நேற்று பதவி நீக்கியிருந்தார்.
இந்த நிலையில், பதவி நீக்கப்பட்ட நால்வர் உள்ளிட்ட சிலர் இணைந்து மொட்டுக் கட்சி அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தத் தயாராகி வருவதாக அந்தக் கட்சித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 25000 வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமகி ஜன பலவேகவின் விஞ்ஞாபனத்தில் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கான வலுவான வேலைத்திட்டம் உள்ளதாகவும், இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
தனியார் துறை முதலாளிகளின் செல்வத்தை அதிகரிக்க இந்த தொழிலாளர்களும் சிரமங்களுக்கு மத்தியில் நிறைய வேலை செய்கிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
பணியிடத்தில் அவர்கள் செய்யும் உன்னதப் பணிகளுக்கு சிறப்புத் திட்டம் உள்ளது, இதன் கீழ் தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 25000 வரை கொண்டுவருவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்படும் என்றும், ஊழியர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பு (CAFFE) தெரிவித்துள்ளது.
இதேவேளை 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டக்கூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம் என கஃபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் வட்ஸ் அப் குழுமங்களிலும், முகநூல் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான காணொளிப் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதாகவும், இவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகத் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற பதிவுகள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து உருவாக்கிய "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று (05) காலை நடைபெற்றது.
இந்த கூட்டியின் சின்னம் “கிண்ணம்” என அறிவிக்கப்பட்டு "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" உத்தியோகப்பூர்மாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
இம்முறை தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வௌிவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னொருபோதும் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தற்போது போன்ற நிலையற்ற தன்மையும் சவாலும் இருந்தது இல்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த பாரதூரமான நிலைமை தொடர்பாக அனைத்து வாக்காளர்களும் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனி நபர் தொடர்பில் அல்லாமல் ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள், கொள்கைகள், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடமுள்ள திட்டங்கள், நடைமுறைகள், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பவர்களின் இயலுமை என்பன குறித்து வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கவும் கல்வி. சுகாதாரம் , விவசாயம். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள், சர்வதேச வர்த்தகம் ஆகிய விடயங்கள் தொடர்பாக முக்கியத்தும் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்மை, நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உறுதிமொழி கோரும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி முறையின் நேர்மை மற்றும் பொறுப்புக் கூறலை கோரி 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான பாரிய மக்கள் போராட்டம் மாற்றத்தை கோரியதை மறக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படத் தயாராக இல்லை என சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வதந்தி ஆளும் கட்சியின் குழுவினால் பரப்பப்படுவதாகவும், சஜித் பிரேமதாசவின் நிச்சயமான வெற்றியைக் கண்டு தேசிய மக்கள் சக்தியும் அந்தக் கதைகளை பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, அவ்வாறானதொன்று நடக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.