ஹோமாகம பகுதியில் மோட்டார் சைக்கிளை 2 பேர் கொள்ளையடிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (27) இரவு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கலாவிலவத்தை பகுதியிலுள்ள கடையொன்றுக்கு இரவு உணவு வாங்கச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி ஆறு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மன்னார் தீவின் வடமேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள குடியேற்றமான தலைமன்னார் கடற்பகுதியில் சனிக்கிழமை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மன்னாரில் உள்ள மீன்வளத்துறை பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக 400 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அது தொடர்பான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், கோரிக்கை பரிசீலனை பிற்போடப்பட்டது.
புனர்நிர்மாணம் முடியும் வரை புல்லர்ஸ் லேனில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு ஒன்றை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை ராஜினாமா செய்து தனது பொறுப்பில் இருந்து விலகிய ஜனாதிபதி, எனவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகள் கிடையாது என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவால் செய்ய நேரிடலாம் எனவே உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானவில் உள்ள தனியார் வீட்டை உரிய முறையில் திருத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.9 வீதமானவர்கள் தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தாமதமாகும் பட்சத்தில் விரைவில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த முன்னணியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் குழுவிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு கட்சியின் அங்கீகாரத்தின் கீழ் இடம்பெற்றதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அமைச்சர்களின் கட்டண நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டு வாடகை, குடிநீர், மின் கட்டணம் போன்றவை செலுத்த வேண்டும் எனவும் மின் கட்டணம் மற்றும் வீட்டு வாடகை செலுத்துவதில் தவறிய அமைச்சர்கள் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர்களின் எண்ணிக்கை 60ஐ நெருங்குகிறது.
மேற்படி அமைச்சர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என் தெரியவந்துள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தூதுவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அரசாங்க பதவியை ஏற்றுக்கொண்டால் அது ஒப்பந்தம் போடுவது போல் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
ரஞ்சன் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியின் நிபந்தனை மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (28 ஆம் திகதி) யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை : காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.