web log free
August 31, 2025
kumar

kumar

நிலுவையில் உள்ள அமைச்சரவைத் திருத்தம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் திகதி குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஜனவரி மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், மாகாண ஆளுநர் பதவிகளுக்கான புதிய நியமனங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் அகில விராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி மார்ச் 20ஆம் திகதிக்கு முன் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் சமகி ஜனபலவேக ஆகிய இரு கட்சிகளும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்துள்ளன.

உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதே தமது கட்சியின் நிலைப்பாடு என பொஹொட்டுவவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என சஜபாவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

JVP ஏற்கனவே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து இறுதி செய்துள்ளது.

தேர்தலுக்கு சகலரும் தயாராக இருந்தாலும், தேர்தலுக்கு இது பொருத்தமான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் கூறுகிறார்.

இந்த நேரத்தில் வாக்களிக்க பணம் எங்கே கிடைக்கும்? அரசாங்கத்தை மாற்றும் பொதுத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ பரவாயில்லை, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், மருந்து கொண்டு வர முடியாமல் கஷ்டப்படும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தல் நடத்த முடியுமா? சாப்பாடு, பானகம், சம்பளம் என்று பணத்தை ஓட்டுக்கு போட்டால் ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் எண்ணெய் வரிசை. எரிவாயு வரிசைகள் வரும். இறுதியாக கிளர்ச்சி ஏற்படும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் அணி கூட்டத்தில் ரணில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எதிர்வரும் மார்ச் மாதம் நிச்சயமாக வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மனித கடத்தலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.

அரசாங்கப் பதவிகளை வகிக்கும் நபர்கள் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பயன்படுத்தி ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சுமார் நாற்பது பேர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இருந்து 30 முதல் 45 இலட்சம் ரூபா வரை அறவிடுவதாக தெரிவித்த அவர், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த நபரை அந்த நாட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் கழித்து நாடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் குறித்த நபர்களின் கடவுச்சீட்டு மற்றும் நாடுகளின் நகல் பிரதிகளும் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர ஜனதா சபை, உத்தர லங்கா கூட்டமைப்பு, 43 படைகள், அனுர பிரியதர்சன யாப்பாவின் அணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி ஆகியன இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அந்தக் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் சிரேஷ்டர்கள் மற்றும் சுதந்திர மக்கள் பேரவையின் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் ஏனைய குழுக்களுக்கு இடையில் இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பினருக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக சுதந்திர ஜனதா சபை மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, நிபுணர் கலாநிதி ஜி. வீரசிங்க, சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோருக்கிடையில் தனித்தனியாக பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் ஒருவர் புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, சுதந்திர மக்கள் பேரவைக்கும் 43ஆவது பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், சம்பிக்க ரணவக்கவும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் டளஸ் அணி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா கட்சி, சுதந்திர மக்கள் பேரவை, உத்திர லங்கா கூட்டமைப்பு, 43ஆவது பிரிவு ஆகியன தனிக் கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

 ஐக்கிய மக்கள் சக்தி தனித்தும், தேசிய  மக்கள் சக்தி தனித்தும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

.2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுக்திகள், பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம்  30-12-2022 அன்று காலை 9:30 முதல் மாலை 4:30 வரை ஹட்டன் கிவி ஹோட்டலில் (மேல்மாடி - இடது மண்டபம் டிம்புள வீதி - மல்லியப்பு. ஹட்டன்) ஒழுங்கு செய்துள்ளது அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் நெறிப்படுத்தலில், செயலாளர் நா. கிருஷ்ணகுமார் சந்திப்பைச் செயற்படுத்துவார்.

மகளிர் இணைப்பாளர்களாக மகளிர் அணியின் ரஷீதா - டிலானி ஆகியோர் செயற்படவுள்ளதுடன் சந்திப்பு ஒழுங்கமைப்புப் பணிகளை தேசிய அமைப்பாளர் பி. கே. ரவி மேற்கொண்டுள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு அவசியாமான ஆலோசனைகளை வழங்குவதுடன் மாதிரி விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் தமது தேசிய அடையாள அட்டைப் பிரதியுடன் வருகை தரவேண்டும் எனவும்  இந்தச் சந்திப்புக்கஆன தொடர்புகளுக்கு மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினரும் அரங்கத்தின் சிவில் சமூக இணைப்பாளருமான K. சுரேஷ்குமாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர். 

ஜனவரி 17, 2023ல் சனிப்பெயர்ச்சி கும்ப ராசியில் நடப்பதால், 2023 முதல் 6 மாதங்களில் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்படும் என  ஜோதிட நிபுணர் கே.ஏ.யு. சரச்சந்திர கூறுகிறார்.

இதனால் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாகவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய சக்தியொன்று அதிகாரத்தைப் பெற்று அந்தத் தேர்தலிலிருந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் எனவும் சரச்சந்திர மேலும் குறிப்பிட்டார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மஹாவ வெவ்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களின் பொதுச் சபைக்கான தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மொத்த ஆசனங்களில் 62% ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

வெவ்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 30 உள்ளாட்சிகளில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் ஜனதா விமுக்தி பெரமுனா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஜனதா விமுக்தி பெரமுன 62 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 16 ஆசனங்களையும், சமகி ஜன பலவேக 14 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 9 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

முப்பது மஹாவ கூட்டுறவு உள்ளூராட்சிகளுக்கு நூறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், தேர்தலில் நடைபெற்ற 30 உள்ளூராட்சிகளில் 13 இடங்களுக்கு போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஜனதா விமுக்தி பெரமுனவிலிருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். 
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் விண்ணப்பத்திருந்த விண்ணப்பத்துக்கு, நுவரெலியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரது சொத்து விவரங்கள், கல்வி தகமைகள் மற்றும் தேர்தல்களில் போட்டியிட்ட வருடங்கள் தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி 02.10.2022 அன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.
 
 
இதற்கு வழங்கப்பட்டப் பதில் கடிதத்தில்,
 
அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
 
முத்துசிவலிங்கம் 1994, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
 
பழனி திகாம்பரம் 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும்,
 
வே.இராதாகிருஷ்ணன் 1999, 2004, 2009, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும்,
 
மயில்வாகனம் திலகராஜ் 2015ஆம் ஆண்டும்,
 
ஜீவன் தொண்டமான் 2020ஆம் ஆண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
அரசியல்வாதிகளின் கல்வித் தகவல்கள் வேட்புமனுக்களில் சேர்க்கப்படாததால் ''தேர்தல் ஆணையகத்திடம் அரசியல்வாதிகளின் கல்வி தகவல்கள் இல்லை'' எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் “RTI விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள “சொத்துகள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும். எனவே சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதற்கு அவர்களின் அனுமதி எதிர்காலத்தில் கோரப்பட்டு, அனுமதி கிடைத்தால் மாத்திரமே அந்தத் தகவல்கள் வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தவலறியும் உரிமைச் சட்டத்தின் 3(1) 5ஆம் பிரிவின்படி இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடமையில், கட்டுப்பாட்டில் உள்ள தவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே, உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய வழங்கிய தவல்களில் திருப்தி இல்லை என்பதால் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மேன்முறையீட்டுக்கு 14.11.2022 என திகதி குறிப்பிடப்பட்டு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “நீங்கள் கோரியிருக்கும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களின் அனுமதி கோரப்பட்டது.
 
இதன்படி, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க சம்மந்தப்பட்டவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியும்.
ஆனால் இதனை எதனையும் குறிப்பிடாமல் தகவல்களை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆலுவலகம் மறுத்துள்ளது.
 
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், எம்.கே சமன் ஶ்ரீ ரத்நாயக்கவுக்கு 28.11.2022 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என்பதால் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
நன்றி, பா.நிரோஷ் - ஊடகவியலாளர் 

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலானது காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்கள் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களை கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்ய முயற்சிக்கும்போது அவ்வாறான முறைப்பாட்டை சில காவல்நிலையங்கள் நிராகரிப்பதாகவும், இனிமேல் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd