web log free
July 01, 2025
kumar

kumar

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

85737373 என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் இயங்கி வந்த குறித்த நிதியமானதும் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியனபத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் தடுப்பூசி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும், நிதியத்துக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், காசோலைகள் மற்றும் பணத்தை நிதியத்துக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவித்தார்.

220 கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதத்தை நிதியம் நன்கொடையாக பெற்றதுடன், 199 கோடியே 75 இலட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபாய் 56 சதம் செலவிடப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டங்கள், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டில்கள் மற்றும் மருந்து கொள்வனவுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதியன்று குறித்த நிதியில் 21 கோடியே 8 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் 05 சதம் மீதி காணப்படுவதுடன், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான ஜனாதிபதி நிதியத்தில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ திலினி பிரியமாலியுடன் தொடர்பில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெண்ணின் விடுதலைக்காக தாம் உழைத்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும், நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, திலினி பிரியமாலியை விடுவிப்பதற்காக தான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே நாமல் எம்.பி இவ்வாறு கூறினார். 

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளது.

அதன் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

சில அரசியல் கட்சிகளுக்கிடையில் கூட கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று விவாதிக்கப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று வரைவில் கூறப்பட்டதே இதற்கு நெருங்கிய காரணம்.

22வது அரசியலமைப்பு திருத்த வரைபு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றதுடன், 22ஆவது திருத்தத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது வேடிக்கையானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் வாக்களிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுவாக இணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் தரப்பினரால் முடியாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஜனதா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் 22வது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த உதவி இராஜாங்கச் செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இவர்களை விடுவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நிர்மலநாதன் தெரிவித்தார்.

திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட தொலைபேசி ஊடாக ஒருவருக்கு அழைப்பு எடுத்து பிணை பெற 300 இலட்சம் பணம் கேட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிவித்தது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (19) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த உண்மைகளை அறிவித்தனர்.

சந்தேகநபர் சிறைச்சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த தொலைபேசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பணம் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது உதவியாளர் இசுரு பண்டார ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் கலைக்கப்படும் நேரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.

குறித்த நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இருபத்தி இரண்டாவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை எதிர்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே இருபத்தி இரண்டாவது திருத்தத்தை நிறைவேற்றினால் பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபத்தி இரண்டாவது திருத்தம் காலத்தின் தேவை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதனை ஏற்றுக் கொள்வதற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியும் , இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்துள்ளனர். இளைஞன் போதைக்கு அடிமையானதால் , மாணவி காதல் தொடர்பினை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார்.

அதன் போது அங்கிருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் , அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

அதனை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd