web log free
August 31, 2025
kumar

kumar

வெளிநாட்டு பிரஜையான பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு சமகி ஜன ஜனபலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (17) கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜை அல்லாத குறித்த எம்.பி.யை உடனடியாக குடிவரவு திணைக்களத்தின் மிரிஹானே தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நாடு கடத்த வேண்டும் என ரகுமான் தெரிவித்தார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு அளுத்கடை நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளது.

அவர் 2014 ஆம் ஆண்டு பெற்ற வதிவிட விசா மற்றும் அந்த வீசா 2015 ஆம் ஆண்டு ஏழாவது மாதத்தில் காலாவதியானது. இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அரசாங்கம் தெளிவாக மறைத்துள்ளதுடன், இவ்விடயத்தை ஆராய்ந்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவேன் என்கிறார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவருக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, வழக்குக்கு தொடர்பில்லாத வெளி தரப்பினர் வந்து தமது கட்சிக்காரருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கில் சம்மந்தப்படாத வெளி தரப்பினரால் அவ்வாறான உத்தரவைப் பெற முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டுப் பயணத்திற்கான தடையை நீக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை போலியானது என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த முறைப்பாடு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசாங்கம் என்பன 150,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினமும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியில் செல்ல தடை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை - மெராயா லிப்பக்கலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் வளர்ந்து வரும் தொழிலதிபருமான யோகராஜ் ரஞ்சித்குமார் என்பவருக்கு உலக சமாதான பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் குறுகிய காலத்திற்குள் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு இவர் பெரிதும் உதவி புரிந்துள்ளார்.

அத்துடன் வியாபாரத் துறையில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளராக வளர்ந்துள்ள யோகராஜ் ரஞ்சித்குமார் தனது துறையில் மென்மேலும் வளர வேண்டும் என ஊக்குவிக்கும் நோக்கத்தில் உலக சமாதான பல்கலைக்கழகத்தின் ஊடாக கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் நவரத்தினம் அவர்களால் இந்த கௌரவ கலாநிதி பட்டம் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டது. 

வவுனியா – செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றுக்குள் வீழ்ந்து 09 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த கிணற்றில் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் செட்டிக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – புபுதுபுர பிரதேசத்தில் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட போதே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புபுதுபுர பிரதேசத்தில் நேற்று(16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 14 கிராம் 220 கிராம் ஹெரோயினுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். புபுதுபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட போது, 06 பெண்கள் பொலிஸாரை கற்களால் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 06 பெண்களையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(17) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு, கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் 2021ஆம் ஆண்டு 2,145 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அநீதி இழைக்கப்பட்ட புலம்பெயர்ந்த மலையக தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர் நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும்,தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என அறிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd