web log free
May 12, 2025
kumar

kumar

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்டவர்கள். நாங்கள் அஹிம்சை வழியில் போராடினோம். அதற்குக் கிடைத்தது அடியும் உதையும். அடக்குமுறையை எதிர்த்து ஆயுத வழியில் முப்பது வருடம் போராட்டம் இடம்பெற்று அதுவும் தவறி விட்டது. ஆகவே இனி என்ன செய்வதென்று தெரியாமல் இறைவனிடம் மன்றாடுகிறோம்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களிடம் கூறினேன். ஒற்றுமை என்பது எமது அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் கிடையாது. பதவி தமது பரம்பரை சொத்து என்பது போல் அவர்கள் செய்யப்படுகின்றனர். ஏனையவர்கள் முன் வருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அதுவே அவர்களது குணமாக இருந்தது” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறும் புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகவும் கவலையாக இருப்பதாகவும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தொழிலாளர் தேசிய சங்கம் பூரண ஆதரவு வழங்கும் என அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது முகநூலில் விடுத்துள்ள செய்தி வருமாறு, 
 
"தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.
 
எனவே எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்."

 

நிதி ​அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி கடமையாற்றுவார்.

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் கூறுவதற்காக தன்னால் பதவி விலக முடியாது எனவும், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'யாரேனும் என்னை அனுப்ப நினைத்தால் அனுப்பி காட்டட்டும்' என மஹிந்த கூறியுள்ளார். 

அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள் குழுவுடன் அலரிமாளிகையில் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் எவ்வாறான மாற்றங்களைச் செய்தாலும் 13வது திருத்தச் சட்டம் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் கூட்டுக் கட்சி ஒன்று கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும். 13 இருக்க வேண்டும்” என மீன்பிடி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அதே அபிப்பிராயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மலையக தமிழ் மக்களின் தேசியத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற மறைந்த தேசியத் தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை சிறுபான்மையினருக்கு நல்லது என்றனர். ஆனால் இன்று சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.

எவ்வாறான திருத்தங்கள் கொண்டு வந்தாலும் 13வது திருத்தம் தொடர வேண்டும் என ஈபிடிபி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனாதிபதி கூறினால் தாம் இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைய தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பின்னரே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொண்ட கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சமல் ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முதன்மை பணக்காரரான எலோன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ய ட்விட்டர் சபை, தீர்மானித்துள்ளது.

இதன்படி, 44 பில்லியன் டொலர்களுக்கு செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளத்தின் கட்டுப்பாட்டை உலகின் மிகப்பெரிய பணக்காரரிடம் ட்விட்டர் நிறுவனம் ஒப்படைக்கிறது.

இது இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன்களை காட்டிலும் 6 பில்லியன் டொலர்களே குறைவான தொகையாகும்.

நேற்று திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர், "ட்விட்டர் சபை, எலோன் மஸ்கின் முன்மொழிவை மதிப்பீடு செய்த பின் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது ட்விட்டரின் பங்குதாரர்களுக்கு முன்னோக்கி செல்லும் சிறந்த பாதை என்று தாம் நம்புவதாக பிரட் டெய்லர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 83 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு சிறந்த ட்விட்டர் பயனரான மஸ்க், உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான பேச்சுக்கான தளமாக, நிறுவனத்தின் திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மோசமான விமர்சகர்கள் கூட ட்விட்டரில் இருப்பார்கள். ஏனென்றால் பேச்சு சுதந்திரம் என்றால் அதுதான் என்று மஸ்க் நேற்று திங்களன்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன், இதுவரை மின்னியல் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன தலைவராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலோன் மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd