விவசாய திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு இணைந்து வீட்டு தோட்ட விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
இராஜாங்க கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி. பி.ஹேரத் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மற்றும் பயிர்களின் நஷ்டத்திற்கு தீர்வாக இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நாட்களில் விதை பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறினார்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஏற்ற மரக்கறிகள் பயிரிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே ஈர வலயத்தில் விவசாயம் செய்யப்படாத வயல் நிலங்களில் மற்ற பயிர்களை பயிரிட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாய சேவைகள் திணைக்களம் எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளது.
எதிர்காலத்தில் அதற்கான முன் அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி தெரிவித்தார்.
நாட்டில் 84,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படாத நெல் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஈர வலயத்திலுள்ள பல நெற்களஞ்சியங்கள் நீடிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அரசியலமைப்பின் 70 (1) ஏற்பாட்டுக்கு அமைய, இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்காக அறிவிப்பொன்றின் ஊடாக பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு, பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழு உள்ளிட்ட விசேட குழுக்களின் பதவிக் காலமும் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவர்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதி அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சுங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதற்கிணங்க, குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சரின் சாரதியான பிரபாத் எரங்க ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பாக சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாகன சாரதியான பிரபாத் எரங்க பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“முடிந்த அளவு தாமதமின்றி கொழும்பு வருவதற்கு நினைத்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் சென்ற காரை முந்திச் சென்றேன்.
நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, முன்னால் இருந்த கண்டெய்னர் மீது மோதியது. பின்னர் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் விபத்தின் போது ஜீப் மணிக்கு 160 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் செலுத்தப்பட்டதாகவும், ஜீப் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் ஜீப்பில் சிக்கியிருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரியை மீட்க பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடியுள்ளனர்.
எப்படியிருப்பினும் காயமடைந்தவர்களை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி | Sanath Nishantha Accident High Speed
நேற்று முன்தினம் மாலை நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.
அவர் தனது மூத்த சகோதரரை சந்தித்து நள்ளிரவில் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், 50க்கும் மேற்பட்ட செயற்குழுக்கள் நீக்கப்படும்.
பாராளுமன்ற அமர்வுகளை நிறைவுறுத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று இரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.
எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசைக்கச்சேரி நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நிலை காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் இளையராஜா அவர்களின் மகள் பவதாரணி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இலங்கையில் சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சிகிச்சை பலனின்றி அவர் இறைவனடி சேர்ந்துள்ளதால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அல்லாது ஒட்டுமொத்த உலக தமிழ் பேசும் மக்களும் இளையராஜாவின் அனைத்து ரசிகர்களும் மிக வேதனையுடன் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மல்சாலைக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டு நாளை (26) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மரணமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.
இதன்படி, பிரியங்கர விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக இருப்பதால், அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியில் அமர இருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும்.
கட்டுநாயக்க அதிவேக வீதியின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இராஜாங்க அமைச்சரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.
கொஸ்கொட சுஜியின் அறிவுறுத்தலின் பேரில் பெலியத்தையில் 5 பேரை சுட்டுக் கொன்றதை பூஸ்ஸே ஹர்ஷ இயக்கியதாக தற்போது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பாக ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தற்போது பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றதுடன், கொலையாளிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் பஜேரோ ரக ஜீப் ஒன்றும் காலி பகுதியிலுள்ள பிரிவேனா ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா கடந்த திங்கட்கிழமை காலை தங்காலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜராகச் சென்றிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
T56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் இந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 6 குழுக்களின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சமன் குமார என்ற சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த பஜேரோ ரக ஜீப் காலி வித்யாலோக பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சமன் பெரேரா உள்ளிட்ட ஐவரை கொன்ற பின்னர் கொலையாளிகளை ஏற்றிச் சென்ற ஜீப் பெலியத்த ஹக்மன ஊடாக கம்புருபிட்டிய மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளுக்கு வந்துள்ளதுடன், அக்குரஸ்ஸ பங்கம, யக்கலமுல்ல பிரதேசங்களில் சுற்றித் திரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அக்குரஸ்ஸ கேட்டன்வில ஊடாக யக்கலமுல்ல வீதியில் ஜீப் செல்வது பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அக்குரஸ்ஸ மலிதுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சமன் குமார என்ற சந்தேக நபரின் வீடு உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி சோதனையிடப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப் வீட்டின் அருகே கழுவப்பட்டு அதில் பல கண்ணாடி துண்டுகளும் சோதனையில் கண்டெடுக்கப்பட்டன.
இதேவேளை, கொஸ்கொட சுஜியின் அறிவுறுத்தலின் பேரில் வெளிநாட்டில் இருந்து பூஸ்ஸே ஹர்ஷ என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர், இராணுவ சிறப்புப் படையின் முன்னாள் சிப்பாய் மல்லவ லங்கா ஹேவா என அழைக்கப்படும் இந்திக அசங்க குமார அல்லது மோல் அசங்க என அழைக்கப்படும் சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பல குற்றச்செயல்களில் கைது செய்வதற்கு தேவையான அனுபவமிக்க துப்பாக்கி சுடும் வீரரான இவர் கெசல்வத்த தினுக, கணேமுல்ல சொஞ்சீவ, கொஸ்கொட சுஜி உள்ளிட்ட பல பாதாள உலக கும்பல் தலைவர்களுக்கு வாடகைக்கு துப்பாக்கி சுடும் வீரராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் பூதவுடல் நேற்றிரவு குருநாகலிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த குருநாகல், கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த புத்திக ராஜபக்ஷவின் சடலமும் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
உயிரிழந்த சமன் பெரேரா மற்றும் புத்திக ராஜபக்ஷ ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் மல்கடுவ நகரசபை பொது மயானத்தில் இடம்பெற்றன.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த காலி இந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த சமீர மதுசங்க, ஹசித சங்சுக மற்றும் நளின் சம்பிக்க ஆகியோரின் சடலங்களும் அவர்களது வீடுகளிலேயே வைக்கப்பட்டுள்ளன.