தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான வேலைத்திட்டமா என கேள்வி எழுப்பி 22ஆம் திகதி பிற்பகல் ஜனதா விமுக்தி பெரமுனவின் பெலவத்தை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக புதிய ஜனதா பெரமுன கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய மக்கள் படையின் செயற்குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் விபச்சாரத்தை தமது அரசாங்கத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
விபச்சாரத்திற்கு விதி முறைகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வருங்கால ஜனாதிபதியை உருவாக்க முயலும் கட்சியின் பிரதிநிதிகள் இப்படியான முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிடுவதன் அர்த்தம் என்ன என்று கேட்கும் பதாகை கண்காட்சியும் இங்கு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 70 வீதத்துக்கும் அதிகமான பௌத்தர்கள் வாழும் நாட்டில் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக புதிய ஜனதா பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறானதொரு போராட்டம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் விசேட அம்சமாகும்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவளிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நியமிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
டிஃபென்டர் ரக வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை நுழைவு வாயில் அருகே உள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இறந்தவர்களின் சடலங்கள் வாகனத்திலும் வெளியேயும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது, இரண்டாவது காலாண்டில் அது 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
15-24 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினரின் வேலையின்மை விகிதம் இரண்டாவது காலாண்டில் 25.8 சதவீதமாக அதிகரித்திருப்பது ஒரு தீவிரமான சூழ்நிலை.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் தெரிந்துவிடும். திருகோணமலையில் இன்று காலை 10 மணிக்கு கூடும் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வாக்களிப்பார்கள்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், தேர்தலொன்றின் மூலம் தேர்வு செய்யப்படப் போகிறார் என்ற விடயம் வெளியானதும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பற்றிக்கொண்ட பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் கடந்த பொதுத் தேர்தல் களம் வெளிப்படுத்திய போட்டி, பொறாமை, கசட்டுத்தனங்களுக்கு ஒப்பான நிலை இப்போதும் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பணமுதலைகளும் அவர்களை ஒட்டியிருக்கும் குருவிச்சைகளும் தங்களது சுயநல தேவைகளுக்கான தலையீடுகளை எந்தவித அரசியல் அறமும் இன்றி இறுதிக்கணம் வரையில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த முதன்மைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர், ஜனநாயக முறையில் இம்முறை தெரிவு செய்யப்படவிருக்கிறார். கட்சியின் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் அப்பால் நின்று, சில சிரேஷ்ட தலைவர்களே கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தீர்மானித்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் இம்முறை நிலைமை அவ்வாறு இல்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் நேரடியாக வாக்களிக்கிறார்கள். உயர்ந்தபட்ச ஜனநாயகம் கட்சிக்குள் பேணப்படுவதற்கான ஆரம்ப கட்டமாக இதனைக் கொள்ளலாம்.
குடும்பக் கட்சிகளைக் கொண்டிராத தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சியின் இந்தத் தலைவர் தெரிவை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அதுதான், வாழ்நாள் முழுவதும் தலைவர்களாக இருக்க நினைப்பவர்கள் இல்லாத கட்சி அரசியலை நிலை நிறுத்த உதவும்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வு என்பது, அடிப்படையில் உட்கட்சி (ஜனநாயகம்) சார்ந்தது. ஆனால், அது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைத்துவத்தையும் தீர்மானிக்கும் விடயம் என்பது போலவே, தமிழ்ப் பரப்பு நோக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று சி.வி.விக்னேஸ்வரன் கருத்துச் சொல்கிறார். தமிழரசுக் கட்சினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட விக்னேஸ்வரன், கட்சித் தலைமை மீதும் கட்சி நடவடிக்கைகள் மீதும் அதிருப்திகளை வெளிப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பித்து பிரிந்து சென்றவர். அவர், தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு யார் வரவேண்டும் என்று கூற விளைகின்றார் என்றால், தமிழரசுக் கட்சியின் தலைமை தமிழர் அரசியலில் வகிக்கும் பங்கு என்ன மாதிரியானது என்பது தெரியும்.
இன்னொரு பக்கம், அக - புற சக்திகள் தமிழரசுக் கட்சியின் தலைவராக யார் வரவேண்டும் என்பது குறித்து அதீத கவனம் செலுத்துவதைக் காட்டுவதாகவும் கொள்ள முடியும். சமூக ஊடகங்களிலும், அக - புற தலையீடுகள் மூலமும் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
சில தரப்புக்களினால் அழுத்தங்கள் என்பது அச்சுறுத்தல் என்ற அளவுக்கு அதிகரித்தும் இருக்கின்றன. பொதுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை பொது வெளியில் பகிர்ந்து, அவர்களின் வீடுகளை முற்றுகையிட வேண்டும் என்றெல்லாம் சில தரப்புக்களினால் தூண்டப்படுகின்றது. இந்தச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர், கடந்த பொதுத் தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரனுக்கு எதிரான அணியில் இருந்தவர்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
இன்னொரு பக்கம், பொதுக்குழு உறுப்பினர்களை புலம்பெயர் தேசங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் சிலர், தாங்கள் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள்.
தாங்கள் சொல்வதற்கு இணங்காது விட்டால், குறித்த உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அவரைத் தோற்கடிப்பதற்காக வேலை செய்வோம் என்றும் அச்சுறுத்தப்படுகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலிலும் யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்ற புற அழுத்தங்கள் கனதியாக இருந்தன.
ஆனால், புற அழுத்தங்களைப் புறக்கணித்து தங்களுக்கு யார் தேவை என்பதை உணர்ந்தே தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். புற அழுத்தங்களுக்கு அடிபணிந்தவர்களும், அந்த வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டு வீடுகளில் இருந்த காட்சிகளை தமிழ்த் தேசம் காண்பித்தது.
அதனை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், அக - புற அழுத்தங்களை பொருட்படுத்தாது தலைவர் தேர்வில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வில் வேட்பாளராக இருக்கும் சிரேஷ்ட தலைவரான சீ.யோகேஸ்வரன் மோசமான முன்னுதாரணமாக செயற்படுகிறார். ஏற்கனவே, அவர் தன்னை டம்மி வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்.
எம்.ஏ.சுமந்திரனை தோற்கடிப்பதற்காக சிவஞானம் சிறீதரனுக்காக போட்டிக் களத்தில் இறங்கியதாக வெளிப்படுத்திவிட்டார். அதுமாத்திரமல்லாமல், தான் ஆதரிக்கும் வேட்பாளரை என்ன காரணத்துக்காக பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதரவை கோருவதுதான் சரியாக இருக்கும்.
ஏனெனில், நடைபெறுவது பொதுத் தேர்தல் அல்ல. போட்டியில் இருப்பது மாற்றுக் கட்சியும் அல்ல. ஒரே கட்சிக்குள் இருக்கும் இருவருக்கு இடையில்தான் போட்டி. யார் வென்றாலும் அவரோடு இணைந்து பணியாற்றுவேன் என்று சுமந்திரனும் சிறீதரனும் அறிவித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், மூத்த தலைவராக யோகேஸ்வரன் அதற்கான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவர் இடுப்புக்கு கீழே தாக்குகின்ற அறமற்ற செயற்பாட்டை சொந்தக் கட்சி வேட்பாளர் மீதே செய்கிறார். பெரும் வைரிகளுக்கு இடையிலான போரிலேயே இடுப்புக்கு கீழ் தாக்குவது அறமல்ல என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், சொந்தக் கட்சியினர் மீதே அவ்வாறான கீழ்த்தரமான செயலை யோகேஸ்வரன் செய்திருக்கிறார்.
'சுமந்திரன் தமிழ்த் தேசியவாதி அல்ல. அவரிடம் தமிழரசுக் கட்சித் தலைமை செல்வது எதிர்காலத்துக்கு கேடு..' என்று அவர் ஊடக மாநாட்டைக் கூட்டி அறிவிக்கிறார். ஒரே கட்சியில் பத்து வருடங்களுக்கு மேலாக சுமந்திரனோடு பயணித்தவர் யோகேஸ்வரன். அப்படிப்பட்ட ஒருவர், உட்கட்சித் தேர்தலொன்றுக்காக இவ்வாறான விடயத்தை பொது வெளியில் வைக்கிறார் என்றால், அதன் பின்னணி தொடர்பில் ஆராய வேண்டியிருக்கின்றது.
இன்றைக்கு யோகேஸ்வரன் சிறீதரனுக்காக வாக்குக் கேட்கும் ஒருவர். வெளிப்படையாக நோக்கினால், அவர், சிறீதரனினால் மட்டக்களப்பு வாக்குகள் சுமந்திரனுக்கு செல்வதைத் தடுப்பதற்காக களமிறக்கப்பட்ட டம்மி வேட்பாளர் என்பதுதான்தான் பெரும்பாலானவர்களின் பார்வை. இதுவே சிறீதரனின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்க வைக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில். தற்போது யோகேஸ்வரன் வெளிப்படுத்தும் கருத்துக்களும் சிறீதரனின் ஆசிர்வாதத்தோடு அரங்கேற்றப்படுவன என்றே கொள்ளப்படும். உண்மையில் இது, தலைமைத்துவ பண்புகள் சார்ந்த ஒன்றா? யார் வென்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் ஒருவர் இவ்வாறான நிலையை எவ்வாறு தன்னுடைய பெயரினால் அனுமதிக்கிறார்?
அதுபோக, தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வில் வென்றால், எதிராக போட்டியிட்டவரை உள்வாங்கி பயணிப்பதற்கு அவர் தயாராக இருப்பதற்கான மனநிலையின் வெளிப்பாடா இது? சிலவேளை தான் தோல்வியுற்றால், சுமந்திரனோடு எப்படி அவர் இணைந்து பயணிப்பார்? தமிழ்த் தேசியவாதி இல்லாத சுமந்திரனின் தலைமைத்துவத்தை அவர் எப்படி ஏற்க முடியும், இல்லையென்றால் அவர் கட்சியை விட்டு வெளியேறுவாரா? இந்தக் கேள்விகள் இந்தப் பத்தியாளரினால் பெரும் ஆர்வத்தோடு எழுப்பப்படுவன அல்ல. மாறாக, ஒரே கட்சிக்குள் தலைவர் தேர்வில் போட்டியிடுவதற்காக மிகமோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தும் அணியினர் சிறீதரனின் பெயரைச் சொல்லி செய்யும் போது தவிர்க்க முடியாமல் எழுப்பப்படுவன.
'சுமந்திரன் எதிர் சிறீதரன்' என்ற போட்டிக்களத்தில் யாருக்கு தங்களது ஆதரவு என்று அறிவித்த பல முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள். அதில், முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான து.ரவிகரன் முக்கியமானவர். அவர், தன்னுடைய ஆதரவு சுமந்திரனுக்கானது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
உட்கட்சி ஜனநாயகம் சார்ந்து இடம்பெறும் தேர்தலொன்றில் ஏன், ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவித்தீர்கள் என்று இந்தப் பத்தியாளர் அவரிடம் கேட்டார். அதற்கு ரவிகரன் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். "....தமிழரசுக் கட்சியில் சுமந்திரனும் சிறீதரனும் முக்கியமான தலைவர்கள். அவர்கள் இருவரும் கட்சிக்கு அவசியமானவர்கள். அவர்களில் ஒருவரைத் தவிர்த்துக் கொண்டு நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஆனால், தமிழரசுக் கட்சியின் முகமாக இருப்பவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதற்கான ஆளுமையோடு இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரமல்லாமல், வடக்கு கிழக்கு பூராவும் தலைவராக -செயற்பாட்டாளராக இருக்க வேண்டும்.
அதனையெல்லாம் தாண்டி, தமிழர் தாயகம் காக்கப்பட்டாலே, தமிழ்த் தேசியம் காக்கப்படும். அதற்கு முதலில் தமிழர் நிலம் காக்கப்பட வேண்டும். நிலத்தைக் காத்தலில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சுமந்திரன் செலுத்தும் வகிபாகம் யாரினாலும் ஈடுசெய்ய முடியாதது.
குருந்தூர் மலை விவகாரம், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடங்கி எல்லை மாவட்டமான முல்லைத்தீவு எதிர்கொள்ளும் பேரினவாத ஆக்கிரமிப்புச் சிக்கல்களை எதிர்கொள்வதில் சுமந்திரன் முதல் ஆளாக நிற்பவர். அதனால்தான், அவருக்கான ஆதரவினை வெளிப்படையாக அறிவித்தேன்..." என்றார்.
தமிழரசுக் கட்சித் தலைமைத்துவத்துக்கான தேர்தலை சாதி, மதம், பிரதேசவாதம் என்கிற அணுகுமுறையோடு கட்சிக்குள்ளும் வெளியிலும் அணுகும் தரப்பினரும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சுமந்திரனதும், சிறீதரனதும் சாதி, மத அடையாளங்கள் குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள். அப்படிப் பேசுவது குறித்து எந்தவித அவமானமும் அவர்களிடத்தில் இல்லை. அப்படி பேசுபவர்களில் அநேகர் தாங்கள் தலைவர் பிரபாகரனின் வழி நிற்பவர்கள் என்று அறிவிக்க வேறு செய்கிறார்கள்.
தலைவர் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணப்பாட்டை விதைத்தவர்கள். அவ்வாறான நிலையில், சாதி, மத, பிரதேசவாத அடையாளங்களின் வழியாக தமிழரசின் தலைவரைத் தேர்தெடுக்க முனைவோரும், அதனை வலியுறுத்துவோரும் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள். அவர்கள், குறுந்தேசிய வியாதிகள். அவர்களுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் குறுந்தேசிய வியாதிகள், அதிக தருணங்களில் மதவாத சக்திகளின் கைப்பாவைகள்.
தமிழ்த் தேசியம் தொடர்ந்தும் நிலைபெறுவதென்பது, தமிழ் மக்கள் மத்தியில் மதவாதத்தை விதைப்பதற்கு தடையாக இருக்கும். அதனை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் துர்சக்திகள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் கையாள்கின்றன. கடந்த பொதுத் தேர்தல் நேரத்திலும் மதவாத -சாதியவாத பிரிவினைகளை விதைக்க முற்பட்டார்கள். இப்போது, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்தலின் போதும் அதனைத் தூக்கி சுமக்கிறார்கள். இவ்வாறான கசடுகளையெல்லாம் கடந்து நின்று பொதுக்குழு உறுப்பினர்கள், தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
ஒரு கட்சியின் தலைமைத்துவத்துக்கான தேர்தல் இவ்வளவு தாக்கங்களை சமூகத்துக்குள் ஏற்படுத்துகின்றது என்றால், அந்தக் கட்சியின் தேவை அதிகமானது என்று அர்த்தம். அதிருப்திகள் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரசுக் கட்சி மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை அது காட்டுகின்றது. இன்று தெரிவாகும் புதிய தலைவர், அதனை உள்வாங்கி கட்சியை ஒருங்கிணைத்து இளைஞர்களை அதிகமாக உள்வாங்கி செயற்பாட்டுத் திறனுள்ள கட்சியாக மாற்ற வேண்டும். ஓய்வூதியர்களின் கூடாரமே தமிழ்த் தேசிய அரசியல் என்ற நிலையை மாற்றி, விடுதலை நோக்கி வீறுநடைபோட வேண்டும். அதுதான், முதன்மைக் கட்சியான தமிழரசு மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு.
இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார செலவு கொடுப்பனவின் நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவும், ஏப்ரல் முதல் அதிகரிப்பை வழங்கவும் முன்மொழியப்பட்ட போதிலும், இம்மாதம் முதல் மார்ச் வரையில் அந்த தொகையில் ஐம்பது சதவீதத்தை வழங்குவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் முதல் மார்ச் வரை தலா ஐந்தாயிரம் ரூபாயும், மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டும் வழங்கப்படும்.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7800 ரூபாவுடன் ஐயாயிரம் ரூபாவை சேர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் வரை பன்னிரண்டாயிரத்து எண்ணூறு ரூபாவை (12800) செலுத்துமாறும் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவை பதினேழாயிரத்து எண்ணூறு ரூபாவாக அதிகரிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதிகரித்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, சாதாரண மற்றும் தின ஊழியர்களுக்கு வேலை நாட்களின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிமேல் சிவில் உடையில் வாகனங்களை சோதனையிட வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரொஷான் குமாரதிலகவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இன்று (20) காலை அலவ்வ பிரதேசத்தில் உள்ள ரொஷான் குமாரதிலக்கவின் வீட்டிற்கு சென்ற போதே பதில் பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த ரொஷான் குமாரதிலகவின் மனைவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டையும் வழங்கினார்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்குமானால் வீண்பேச்சு பேசாமல் விவாதத்தில் ஈடுபடு வருமாறு மௌபிம ஜனதா கட்சி தலைவர் திலித் ஜயவீர மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அநுரவுக்கு விடுத்த அழைப்பு இன்னமும் செல்லுபடியாகும் என ஸ்ரீலங்கா கார்டியனுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசியல் சித்தாந்தம் கொண்ட ஒரே அரசியல் கட்சி தமது கட்சிதான் என கூறிய திலித் ஜெயவீர, தற்போதுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களால் தீர்க்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.