web log free
May 10, 2025
kumar

kumar

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான முக்கிய இறுதி வாக்கெடுப்பு நாளை (08) மாலை 5.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அரசின் வரவு செலவுத் திட்ட ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த ஆவணம் தேர்தலில் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என பலரும் பேசி வருகின்றனர்.

வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தமது வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நாளை கொழும்பில் தங்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை பகல் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன் பிறகு வாக்குப்பதிவு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான் மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 20 கேபினட் அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தரகர் என கூறப்படும் நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம், சந்தேக நபரின் முகத்தை மறைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முகம் மறைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், நாட்டின் குற்றவியல் வரலாற்றில் இந்த வழக்கு விசேடமானது என நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

" இது மிகவும் விசேஷமான வழக்கு. கொழும்பு நகரின் ஏழைப் பிரிவினரை குறிவைத்து மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழு மனித உறுப்புக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. 

"இந்த கடத்தலை மிகவும் திட்டமிட்ட கும்பல் நடத்தியது. போதைப்பொருள், மருந்து, ஆயுதக் கடத்தல் கும்பலைப் போலவே, இந்த கடத்தலும் மிகவும் பிரபலமானது. சந்தேகத்திற்குரிய இந்த தரகர் 30 முதல் 42 வயதுடையவர்களிடம் 50 லட்சம் முதல் 120 லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாகக் கூறி சிறுநீரகங்களைப் பெற்றுள்ளார்.

"இவ்வாறு 05 பேரிடம் இருந்து மனித உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கப்படுவதில்லை. எனவே பணம் வழங்கப்படவில்லை என கூறி மரியதாஸ் என்ற நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்."

“இவ்வாறு சிறுநீரகம் வழங்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உள்ளார், அவர் தாய்ப்பால் கொடுப்பவர். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த கடத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக கடத்தலின் பரிமாற்ற மையமாக பொரளை தனியார் வைத்தியசாலை செயல்படுகிறது. அந்த வைத்தியசாலையில் ஒரு பேராசிரியரும் இருக்கிறார். அந்த மருத்துவமனை வைத்திர்களுக்கும் இந்த கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?" என விசாரணை நடந்து வருகிறது." என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,

"இவ்வாறு சிறுநீரகம் வழங்கியவர்கள் பொரளை பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்று குழப்பம் செய்துள்ளனர். அப்போது, ​​குழப்பத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கி, இனி குழப்பம் விளைவிக்க வேண்டாம், அப்படி செய்தால் கை கால்களை உடைத்து விடுவேன்´ என மிரட்டியுள்ளனர்."

"இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த கடத்தல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி எப்படி தலையிட்டார்? இந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வைத்தியசாலையில் 52 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. "ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வலையமைப்பில் இடம்பெறும் குற்றச் செயல். மேலும், இது சிக்கலான விசாரணையாகும்" என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். .

அதனையடுத்து, நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தரகரான சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணிவகுப்புக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரினார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் விசாரணைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதால் அவர்களின் பயணத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், குறித்த தரகர் சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 06 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்த நீதவான், அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

UNICEF அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது.

அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும்போது, ​​சுகாதாரம் மற்றும் கல்விக்கு மிகக் குறைவாகவே மிச்சமாகும்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

அடுத்த ஆண்டு 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் 2.9 மில்லியன் குழந்தைகள் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையக்கூடும் என்றும், எதிர்வரும் மாதங்களில் குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் யுனிசெப் கணித்துள்ளது.

பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 6 முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 07 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் பிறந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்து, கட்சிக்காக பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளானேன் என கூறும் முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே மரணிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா தத்துவத்தை தாம் பாராட்டுவதாகவும், அந்தத் தத்துவத்திற்கு அமைவாக அரசியலில் ஈடுபடும் எந்தவொரு அரசியல் குழுவிற்கும் ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் இரண்டு தேசிய நெருக்கடிகளுக்கு நிரந்தர கணிசமான தீர்வுகளை வழங்குவது மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது போன்ற விஷயங்களில் மட்டுமே நாட்டின் பொறுப்புள்ள மூத்த தலைவர் என்ற முறையில் தனது ஆலோசனைகளை வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறான கொள்கைகளை பின்பற்றுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் கட்சிக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் போது, ​​உண்மையான கட்சி உறுப்பினர்களுக்காக தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் தன்னை அர்ப்பணிப்பேன் எனவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

எச்.ஐ.வி தொற்றாளர்களின் துரித அதிகரிப்பு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள பாமசிகள் மூலம் மாதாந்தம் ஐம்பதாயிரம் ஆணுறைகளை (கொண்டம்) இலவசமாக வழங்க பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் இறுதி நாள் வரை பொலன்னறுவை மாவட்டத்தில் 16 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் (எயிட்ஸ் நோயாளிகள்) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 05 பேர் இளம் வயதினர் எனவும் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.கே. சரத்சந்திர குமாரவன்ச கூறுகிறார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 82 எனவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒரே பாலின உறவுகளினால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த நிலையங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கொண்டம் வழங்குவதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd