web log free
December 22, 2024
kumar

kumar

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பேமதாசவுடன் கலந்துரையாடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கேட்பது தற்போதைய ஜனாதிபதியை எனவும் அதனால் எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு தனக்கு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேட்புமனுக்களை கையளிப்பது மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு அறுபது வயதில் ஓய்வு அளிக்கும் அரசாணையை எதிர்த்து மருத்துவர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு மீது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு கூறியுள்ளது.

இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டுக்கான (2023) கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனுமதி அட்டைகள்  மற்றும் நேர தாள்கள் பாடசாலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தச் சீட்டுகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை ஒரு தடவை மாத்திரமே திருத்திக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க அண்மையில் தனது ஆலயத்திற்கு வருகை தந்ததாக மிஹிந்தலை விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அப்போது, பீரித் நூல் கட்டி, நாட்டை நன்றாக ஆள வேண்டும் என்று ஆசிர்வதித்து, உபதேசம் செய்ததாக தேரர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், விகாரையை விட்டு வெளியில் வந்த அநுர திஸாநாயக்க பிரித் நூலை அவிழ்த்து முற்றத்தில் வீசியதாக தம்மரதன தேரர் தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

அதைப் பார்த்த மாணவர்களும், சாரதியும் நடந்த சம்பவத்தை தன்னிடம், “இவர்கள் ஏமாற்றுகாரர்கள். அவர்களுக்கு மதம் கிடையாது. கவலைப்படாதீர்கள்’ என்று கூறியதாக தம்மரதன தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.

யூடியூப் சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது தேரர் இவ்வாறு கூறினார்.

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

எம்பிக்கள் ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

சிங்கள-பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக்கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன்.

அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக்கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன். உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம்.

அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வர வேண்டும். பாராளுமன்றத்தில்தான் இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது வரும்போது வரட்டும். ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும்.

இந்த அடிப்படை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும். “76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை.

ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தப்பியோடிய 136 கைதிகளில் இதுவரை 129 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய கைதிகளில் 34 பேரை நேற்று பிற்பகல் வரையிலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களை சோமாவதி சரணாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடும் நடவடிக்கையை இராணுவம் மற்றும் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று பிற்பகல், கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் புலஸ்திபுரவிலும், 19 பேர் பொலன்னறுவையிலும், 34 பேர் ஹிகுராக்கொடையிலும், 25 பேர் மீகஸ்வெவ பொலிஸ் நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க கட்டப்பட்ட கந்தகாடு முகாமில் 485 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா ,ரோஹன பண்டார ஆகியோருக்கும் இன்று வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 அமைச்சுப் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களான A.H.M.பௌஸி, வடிவேல் சுரேஷ் ,அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வாக்களிக்க பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை.

Reckitt Benckiser நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் துப்புரவு மற்றும் கிருமிகொல்லி வர்த்தகநாமங்களில் ஒன்றான Lysol, மதிப்புமிக்க SLIM Effie Awards 2023 இல் அனைவராலும் விரும்பத்தக்க தங்க விருதை வென்றுள்ளது. அந்நிகழ்வில் வழங்கப்பட்ட ஐந்து தங்க விருதுகளில் ஒன்றான இந்த பாராட்டானது, Lysol வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கிறது. இது துப்புரவு மற்றும் கிருமிகொல்லி தயாரிப்பு வகைகளில் நிறுவனத்தின் ஒப்பற்ற ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

Lysol Sri Lanka இனது விருது வென்ற பிரசாரத் திட்டமான ‘More than a floor’ (ஒரு தளத்திற்கும் அதிகமாக) ‘Home supplies & Services’ (வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் சேவைகள்) பிரிவில் தனித்துவத்தை பெறுகின்றது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை உருவாக்குவதன் மூலம், Lysol குடும்பங்களுக்கு கொண்டு வரும் பெறுமதியை மையமாகக் கொண்ட, அதன் அழுத்தமான கருத்தை விபரிப்பதன் மூலம் பார்வையாளர்களை அது கவர்ந்துள்ளது. இலங்கையின் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், ‘More than a Floor’ என்பது வெறுமனே ஒரு உற்பத்தி ஊக்குவிப்பு அம்சத்தையும் கடந்து, உணர்வுபூர்வமான மட்டத்தில் பார்வையாளர்களுடன் ஒன்றாக கலந்தது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான தலைவர் ஷாமிந்த பெரேரா இது பற்றி குறிப்பிடுகையில், சந்தையில் Lysol இன் ஆதிக்கமானது, அதன் தயாரிப்புகளின் தரத்தையும் கடந்து வெளிப்படுகின்றது. நுகர்வோருடன் ஆழமான வகையில் இணையும் வர்த்தகநாமத்தின் திறனானது, அதன் சந்தைப்படுத்தல் தகவல் பரிமாற்ற தொடர்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த மதிப்புமிக்க விருதானது, இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. என்றார்.

சந்தைப்படுத்தல் துறையில் மிகவும் உலகளாவிய மதிப்புமிக்க பாராட்டுகளில் ஒன்றாக Effie விருதுகள் விளங்குகின்றன. அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குகின்ற மற்றும் குறிப்பிட்ட சந்தைப்படுத்தல் நோக்கங்களை அடையும் பிரசாரங்களை அது கௌரவிக்கின்றது. வெற்றிகரமான பிரசாரங்கள் நிரூபிக்கப்பட்ட, அளவிடக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், அப்பிரசாரத்தின் செயற்றிறனை வலியுறுத்துவதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருது நிகழ்வு புகழ் பெற்று விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள 125 இற்கும் அதிக சந்தைகளில் 55 இற்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம், அனைத்து சந்தைகளிலும் ஒரே மாதிரியான இறுக்கமான அளவுகோல்களை தீர்ப்பு வழங்குவதற்காக Effie விருதுகள் பயன்படுத்துகின்றன. இதனால் Effie விருதை வெல்வதானது, உண்மையான உலகளாவிய சாதனையின் அடையாளமாக கருதப்படுகின்றது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் தூய்மை தொடர்பான வர்த்தகநாம முகாமையாளரான, துஷினி ரணசிங்க இது பற்றி தெரிவிக்கையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது சந்தைப்படுத்தல் தொடர்பாடல்

பங்காளிகளுக்கும், நாடு முழுவதிலும் உள்ள எமது விசுவாசமான நுகர்வோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக சவாலான காலங்களில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. என்றார்.

புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு நிறுவனங்களான Phoenix Ogilvy (Pvt) Ltd, Geometry Global (Pvt) Ltd, Dentsu Grant Group ஆகியவற்றின் மூலம் இந்த விருது பெற்ற More than a Floor பிரசாரம் மேலும் உயிரூட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Lysol பற்றி:

பெருமைக்குரிய Reckitt Benckiser நிறுவனத்தின் தூய்மை தொடர்பான தயாரிப்புகளின் ஒன்றான Lysol, நோயை உண்டாக்கும் கிருமிகளிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மில்லியன் கணக்கான குடும்பங்களை பாதுகாப்பதில் உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது. இலங்கையில், Lysol ஆனது அதன் தயாரிப்பு பிரிவில் ஒப்பிட முடியாத சந்தைத் தலைமைத்துவத்தைப் பெறுகிறது. Reckitt Benckiser ஆனது, தூய்மை, சுகாதாரம் மற்றும் போசணை ஆகிய பிரிவுகளில் Air Wick, Dettol, Durex, Harpic, Mortein, Strepsils, Vanish, Veet உள்ளிட்ட இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான நுகர்வோர் வர்த்தநாமங்களின் இல்லமாக விளங்குகின்றது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் IMF நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் நேற்றிரவு(12) நிறைவடைந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. 

இந்த கடன் வசதியின் முதலாவது தவணை கொடுப்பனவாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. 

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து, நிவாரண பொருளாதார வலயத்திற்குள் உள்நுழைவதற்கான இயலுமை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது X பதிவில் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd