web log free
December 07, 2023
kumar

kumar

இலங்கை நாடாளுமன்றத்தின் 17வது சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தனது 81வது வயதில் காலமானார்.

ஜா-எலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானார். 

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்டார். 

போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிட்டகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் தெரியவந்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (27) இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்க சதி, உதவி மற்றும் ஆதரவு வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார்.

கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு, சாட்சியங்களை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி முன்வைக்கும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கத் தயார் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்புக்காக பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.பி இதனை கூறினார். 

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபர்களை பொலிஸ் பிணையில் விடுவிப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கு அதிகாரம் இருந்ததாகவும், ஆனால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இனிமேல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாமல் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதுவும் இடைநிறுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வாகனம் விடுவிக்கப்படும்.

போக்குவரத்து டிஐஜி சகல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளையும், போக்குவரத்து நிலையத் தளபதிகளையும் வரவழைத்து அண்மையில் இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை மாற்றியமைப்பதில் அடுத்த 6 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Oxford மன்றத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது காணப்பட்ட நிகழ்வுகளில் இளைஞர்கள் அரசியல் நோக்கிய கவனம் அதிகரிப்பதும், நாட்டுக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக எழுந்து நின்றமையும் விசேட நிகழ்வாகும் எனவும், எப்படி மாற்றுவது என்பதே இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அந்த சமூக முயற்சியை அரசியலுடன் தொடர்புபடுத்தி அதன் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது ஒரே இரவில் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கரை வருடங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும், அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எம்.பி கூறினார். 

தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக பல தீவிரமான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளரின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 03 ஆம் திகதி விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை சந்தேக நபராக கைது செய்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தி ஆகின்ற 2048 ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும் எனவும் அவை அனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்பணிப்பிலேயே தங்கியுள்ளதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாம் பலமான ஜனநாயக கட்டமைப்பினையும் திறந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சிறியதொரு நாடு என்ற வகையில் அரசியல் ஸ்திரத் தன்மையை பேணி வருகின்ற அதேநேரம் எமது அயல்நாடும் நீண்ட கால உறவை பேணிவரும் நாடுமான இந்தியாவை வலயத்தின் பாதுகாவலனாக கருதுகிறோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான பொருளாதார கொள்கைகளுடன் புத்துயிர் பெற்றுவருகின்ற ஆசிய வலயம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளோடு கைகோர்த்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை முன்நின்று செயற்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இந்தியாவுடன் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமாக மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது என்றும் ஆசியாவின மீக நீண்ட பொருளாதார கூட்டிணைவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை கைசாத்திடுவதால் உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது, அடுத்த 25 வருடங்களுக்குள் செழிப்பான மற்றும் வலுவான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியவர்கள் விரிவான கருத்துக்களை தெரிவித்தோடு, இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்து மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்கள் இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தோடு, செல்வதந்த நாடுகளின் மோதல் இலங்கைக்கு திறக்கப்படவுள்ள இந்திய மற்றும் ஆபிரிக்க வலயத்தின் பொருளாதார சந்தை வாய்ப்புக்களுக்கு தடையாக அமையாது என்றும் ஜனாதிபதியவர்கள் வலியுறுத்தினார்.