web log free
November 18, 2025
kumar

kumar

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(04) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். 

இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பிணை கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதால் அதனை எழுத்துமூலம் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். 

இதன்பிரகாரம் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு காலஅவகாசம் வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கை மீண்டும் ஜூலை 11ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டார்.

ஆசிரியர் அதிபர் சங்கத்தினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

 நடத்தப்பட்ட போராட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக நேற்று பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான மனுவை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ தன்னிடமோ அல்லது சட்டத்தரணிகளிடமோ அது தொடர்பில் ஆலோசிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என்பதும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழு சரியானது என்பதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் தற்போதைய தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலட சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்னொரு அரசியல் கூட்டணிக்கு தயாசிறி ஜயசேகர தலைவராக இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு வடக்கு தொகுதியின் வலய அமைப்பாளராக டொக்டர் ருக்ஷான் பெல்லான நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இது இடம்பெற்றது.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லக்கூடிய நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று கூறினார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். எமது கட்சி பொஹொட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்.”

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் பொஹட்டுவ சின்னத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி பொஹட்டுவ உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ளலாம். அது நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம். 

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை (02) அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.

மேலும் , எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு என்பவற்றுக்கு சலுகை பெற முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிலர் கூறினாலும் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபாவாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd