web log free
July 27, 2024
kumar

kumar

கிழக்கில் மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உதவித் தொகை வழங்கி வைத்ததுடன், நந்தவனம் முதியோர் இல்லம், ADVRO முதியோர் இல்லம், கிழக்கு இஸ்லாமிய மாற்றுத்திறனாளிகள் இல்லம், முஸ்லிம் முதியோர் இல்லம் போன்றவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார். 

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். 

இன் பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் அரவணைத்து செயற்படும் ஆளுநரின் சேவைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.  

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளாந்தக் கூலியாகப் பெறும் ஆயிரம் ரூபா சம்பளம் 2015ஆம் ஆண்டு கோரப்பட்ட சம்பளம் எனவும், அந்தச் சம்பளம் 08 வருடங்களின் பின்னர் கிடைப்பதனால்  தோட்டத்தொழிலாளர்கள் தற்போது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அவர்களது சம்பளம் 3000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்ன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

மேலும் தொழிலாளர் நல நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியில் வைப்பு செய்யப்பட்ட பணத்தைப் பெற அரசு முயற்சிப்பதாகவும், அந்தப் பணம் தொழிலாளர்களுக்கே உரியது என்றும், மத்திய வங்கியின் ஆளுநருக்கோ, நாட்டை ஆட்சி செய்பவருக்கோ அல்ல என கூறினார். 

மேலும் அந்தத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் தற்போது திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும், வருங்கால வைப்பு நிதியிலோ அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியிலோ வைப்பு செய்யப்பட்ட பணத்தைப் பெற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று சங்கத்தின் செயலாளர் கூறினார்.

இந்நாட்களில் பயனாளிகள் பிராந்திய செயலகத்திற்கு அழைக்கப்பட்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

கோதுமை மா கம்பனிகள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று (20) பிற்பகல் வரை 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கையொப்ப சேகரிப்பு நேற்று காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றும் கையொப்பமிட சந்தர்ப்பம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

Onmax பிரமிட் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரமிட் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 300 கோடி கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இரகசியப் பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதனை மிக மெதுவாக ஆராய்ந்து வருவதாகவும், Onmax தடை செய்யப்பட்ட பின்னரும் மக்களிடம் இருந்து 292 கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இன்று (20) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கைது செய்ய சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது மினுவாங்கொட, மஹகம, ஹொரம்பல்ல வீடொன்றில் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 29 வயதுடைய சந்தேக நபரான மாணிக்குகே கசுன் லக்ஷித சில்வாவையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோமாகம பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேகநபர், டுபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரைச் சுட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சுடப்பட்ட இடத்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் பயன்படுத்திய T-56 துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வகத்துடன் (SHOCO) இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது 27/2 இன்கீழ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினை, கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், பெருந்தோட்டப்பகுதிகளில் மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் அவர் முக்கிய பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

நிதி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் மேற்படி கேள்விகள் தொடர்புபடுவதால் கல்வி அமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதிலளிப்பதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு பிரதொரு நாளில் துறைசார் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அவ்வேளையில் தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றிருந்தாலும், தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இன்னும் சட்டப்பூர்வமாக வழங்கப்படவில்லை என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார். அத்துடன், மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படாமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், 

" தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கதைப்பதற்கு ஒருநாள் தனியான விவாதம் அவசியம். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இன்று பதில் வழங்காவிட்டாலும், ஒரு நாள் விவாதத்தை தாருங்கள்." - என்றார்.

இதற்கு பதிலளித்த பெருத்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, விவாதத்துக்குரிய சந்தர்ப்பத்தை வழங்க தயார் எனக் குறிப்பிட்டார்.

திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது தொடர்பான தீர்மானம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள்(OPD) இன்று(19) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் செயற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் G.விஜேசூரியவிடம் வினவிய போது, பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறினார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறினார்.

கொக்கல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டனர்.

62 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.