web log free
April 18, 2024
kumar

kumar

கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் ஆணையாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, டெங்கு அபாய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இந்நிலையில், மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெறவுள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண ஆளுநரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் இரண்டு போயாவிற்கு முன்னர் சமகி ஜனபலவேகவில் பாதி பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சரும், சமகி ஜனபலவேகவின் உப தவிசாளருமான பி. ஹரிசன் வெளிப்படுத்தினார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்தை எதிர்கொண்டாலும், இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தானும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகவும், 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்னுடன் இணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் பி. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூராட்சி சபை தேர்தல் வர வாய்ப்பில்லை. மாகாண சபைத் தேர்தல்கள் இல்லை. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையின்றி உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நான் பதவிகளுக்காக காத்திருக்கவில்லை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டு வருகிறேன். அதனால்தான் நானும், எங்கள் தொகுதியின் உள்ளாட்சி உறுப்பினர்களும், மற்ற 100 உள்ளாட்சி உறுப்பினர்களும் இரண்டு வாரங்களில் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறோம் என்று முடிவு செய்தேன். அது மாத்திரமன்றி, இன்னும் ஓரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவின் மடிக்குச்  சமகி ஜனபலவேகவின் பாதி பேர் செல்வதை நிறுத்த முடியாது என்பதை  கூறுகிறேன். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்திடம் முகத்தைக் காட்டினாலும் இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்கான அவதானிப்புகள் அழைக்கப்பட்டு, அவதானிப்புகளைப் பெற்ற பின்னர், சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு வழியமைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் கஞ்சா ஏற்றுமதி மற்றும் பெரிய அளவில் பயிரிடுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை வருடாந்தர அனுமதி முறை மூலம் அடையாளம் காண அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வந்தாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருப்பதாக அவர் கூறினார்.

அதன்படி அந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு இளைஞர்களை இலக்கு வைத்து தற்போது  வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றார்.

அகுனகொலபல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்தார்.

"தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. நாங்கள் பொது ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளோம், அதன் பிறகு நாங்கள் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் கூறுகையில், வாரத்தில் 4 நாள் வேலை என்று 3 நாட்கள் வார விடுமுறையுடன் அறிமுகப்படுத்தி 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலை மாற்றத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

"புதிய நடவடிக்கையால் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழக்க நேரிடும். இந்த மாற்றத்தைத் தடுக்க அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும்," என்று அவர் கூறினார். 

அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னாள் Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சரிடமிருந்து கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

Clare O'Neil முறைப்படி இலங்கைக்கு பீச்கிராஃப்ட் KA350 விமானத்தை பரிசாக வழங்கினார்.

"இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான திறனை வலுப்படுத்தும். இது நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் நமது நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது" என்று உயர் ஸ்தானிகர் கூறினார்.

நெலுவ தெல்லாவ, மியானாவடுர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

01 வயது, 03 மாதங்கள், 10 வயது மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.

இக்குழந்தைகளின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு முதல் பிள்ளைகளை காணவில்லை என 119க்கு தகவல் கிடைத்துள்ளது.

காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும், காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய, நெலுவ பொலிஸார் விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, பறையனாலகுளம், நீலியமோட்டையில் 26 வயதுடைய பெண்ணைக் கொன்றுவிட்டு, 24 வயதுடைய இளைஞன் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுக் கொன்ற​மை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மற்றும் சந்தேகநபர் இருவரும் நிலைமோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருமணமான பெண் எனவும், கணவர் மற்றும் குழந்தையுடன் நீலியமோட்டையில் வசிப்பவர் எனவும் சந்தேக நபர் தகராறு காரணமாக வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பறையனாலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னை கீழே வீழ்த்தி தாக்கியதாக காலி மஹிந்த கல்லூரியின் அதிபர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிபரின் மனைவிக்கு சுகயீனம் ஏற்பட்டதால், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டு நேற்றிரவு 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி, காரில் உத்தியோகபூர்வ இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லத்தின் வாயிலை திறப்பதற்காக காரில் இருந்து இறங்கிய போது, ​​மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் காருக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் தம்மை இடித்து தாக்கியதாக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மே 27 முதல் ஜூன் 12 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள பொதுப் பரீட்சை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.