web log free
December 22, 2024
kumar

kumar

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியானது கடுமையான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் அதிகம் உள்ள பிரதேசமாக அண்மையில் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 320 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் 64 பேர் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் 1,439 பேர் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே 1,432, 960 மற்றும் 909 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக கொழும்பு மாநகர சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இனங்காணப்பட்ட சகல சிறுவர்களும் சபையின் வைத்திய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் காணப்படும் போசாக்கு குறைபாடுள்ள சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்குவதற்கு சபை செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர். சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023) திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23-09-2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை இவர் தன்னுடைய பதவி விலகலை அறிவித்தபின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால்  நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து தனுஷ்க  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 

"தீர்ப்பு அனைத்தையும் கூறுகிறது" கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

எனக்கு உதவிய அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும், எனது பெற்றோருக்கும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிலருக்கும் நன்றி கூறுகிறேன். எல்லோரும் என்னை நம்பினார்கள், அது எனக்கு மிகவும் பெறுமதியான விடயம், எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரும்பி நாட்டுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். 

கல்கமுவ - அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ளன.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

விபத்தை அடுத்து ரயில் எஞ்சினில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ரயில் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுகவீனமடைந்துள்ளதாக பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாதமையே இதற்குக் காரணம்.

முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை என்பதை நிரூபிக்க நேற்று முடிந்தது. 

அதாவது, நேற்று (27) பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுக்களுக்குத் தேவையான அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்படி குழுக்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும்.

உத்தரவுகளை மீறும் அதிகாரிகளைக் கையாள்வதற்கான சட்டமும் இயற்றப்பட உள்ளது.

துறைசார் கண்காணிப்புக் குழு வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமானதாக இருப்பதால், இந்த மாற்றங்களை விரைவில் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலவானை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது கல்லூரி ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே கசிப்பூ விற்றுள்ளார்.

குறித்த மாணவன் இந்த கசிப்புகளை தண்ணீர் போத்தலில் எடுத்து பின்னர் கப்பில் போட்டு உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் புதிய உறுப்பினர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இவ்விடயங்கள் தொடர்பில் கட்சியின் அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் இணைந்த புதிய எம்.பிக்கள் கூறியுள்ளனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலைமைகளின் அடிப்படையில் எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (செப். 20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) துபாயில் இருந்து செயல்படும் பிரபல குற்றவாளியான ‘மன்னா ரமேஷுக்கு’ துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட அந்த பத்திரிக்கையாளர் ரகசிய தகவலை வழங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகளால் நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஊடகவியலாளர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் அவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

‘மன்னா ரமேஷ்’ என்பவர் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் வழங்கிய ஊடகவியலாளர் மூவரும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று இரவு 11.20 அளவில் புத்தல பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd