web log free
May 09, 2025
kumar

kumar

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பத்தை அதன் இணையத்தளத்திற்கு சென்று பூர்த்தி செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு ஆண்டிற்கு 1,200,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் எவரும் வரிக் கோப்பைத் திறக்க வேண்டும்.

ஒரு வருடத்தின் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலம் மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவு பெறாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என நிதி அமைச்சை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றால் மட்டுமே வருமான வரி செலுத்துபவராக மாறுகிறார்.

இருப்பினும், பெப்ரவரி 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் நடப்புக் கணக்கைத் தொடங்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி பெறும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது மற்றும் நில உரிமையைப் பதிவுசெய்யும்போது வரி அடையாள எண்ணை (TIN) சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

குடிநீர் கட்டண உயர்வுடன், பொது கழிப்பறை பயன்படுத்துவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, கழிவறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்பு ரூ.20 ஆக இருந்த கழிவறை கட்டணம் தற்போது ரூ. 30 ஆகிவிட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிரந்தரமாக நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் தற்போதுள்ள தலைவர்களில் சர்வதேச சமூகம் அங்கீகரித்து சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளும் அனுபவமுள்ள ஒரேயொரு தலைவர் அவர்தான் எனவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களை அமுல்படுத்துவதன் மூலம் 25 வருடங்களின் பின்னர் நாட்டின் தேசிய வருமானம் அதிகரித்துள்ளதாகவும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வரிசையில் நின்று நாட்டைக் கைப்பற்றக் கோரும் வேளையில் ஓடிப்போய் நாட்டின் அதிகாரத்தைக் கோரி மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் சிலர் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இத்தீ விபத்து இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும்,  வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம்(04) ஆரம்பமாகவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய பரீட்சை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 

இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 329 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

434 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. 

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்பவுள்ளது.

ஹொரணை - பாணந்துறை வீதியின் மஹபெல்லான பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக அலோபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த கார் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 'கட்சித் தலைவராக' புதிய பதவிக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 'கட்சித் தலைவர்' என்ற குறைந்த அதிகாரங்களைக் கொண்ட புதிய பதவியொன்றை ஏற்படுத்தி, அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதியை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக வரும் எட்டாம் திகதி கட்சியின் செயற்குழு கூட்டப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd