web log free
December 22, 2024
kumar

kumar

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் இன்று கையொப்பம் இடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வி துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டில் கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டோகாவிலிருந்து நேற்று(24) இலங்கைக்கு வந்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

சந்தேகநபர் 03 பிஸ்கட் டின்களில் பொதி செய்யப்பட்ட 4 கிலோகிராம் கொக்கெய்னை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

34 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருட்களுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் திடீரென சந்தித்து இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அவ்வாறு இல்லை என்றால் நிமல் லான்சா உள்ளிட்ட அணியினரின் ஆதரவு தமக்கு இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தவர்களும், மீள்திருத்தம் குறித்து பேசப்படும் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களும் உறுப்பினர்களை அழைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை 08.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 

பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி, மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தில் பிரதான நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (23) கைது செய்துள்ளனர்.


பக்கமூன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதி சந்தேக நபர் மேலும் பலருடன் இணைந்து இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டமை தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட மாணிக்கக்கல் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நீல நிறமானது என தெரிவிக்கப்படுகிறது.

தான் குறித்த மாணிக்கக்கல்லை வாங்க விரும்புவதாக கூறிய சந்தேக நபர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தனது சகா ஒருவருடன் காரில் சென்று மாணிக்கத்தை பரிசோதித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் பொலிஸ் அதிகாரி போல் வேடமணிந்து வந்த மற்றுமொரு சந்தேக நபர், மாணிக்கக்கல் உரிமையாளரை பயமுறுத்திவிட்டு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 08.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பின்னர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையில இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லையென, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக 200 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும், சஹ்ரான் கைது செய்யப்படவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது அவசியமற்றது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது. அதேபோன்று குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடுமையான வைராக்கியம் உள்ளது. சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதிப்பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாகவும் முஸ்லிம்களை கொன்று முஸ்லிம் குழந்தைகளையும் பெண்களையும் விதவைகளாக்கி விட்டு இலங்கைக்கு வந்து விடுமுறையைக் கழிக்கும் வெளிநாட்டவர்களை கொல்வதற்காகவுமே ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் எவ்விடத்திலும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பாக தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள் என்றார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வரி அதிகரிப்பு இன்று (22) முதல் அமுலுக்கு வருகிறது.

எவ்வாறாயினும், உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷ உணவுத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 4,700 மெற்றிக்தொன் சோயா பீன்ஸ் மற்றும் சோளம் ஆகியவற்றை ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் அமைப்பு வழங்கியுள்ளது.

திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே, இவை வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் உலக உணவுத்திட்டத்தின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவினுடைய 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒருபகுதியாக இந்த உதவி அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு பணம், உணவு, உதவி மற்றும் மதிப்பு வவுச்சர்களை வழங்குவதற்கு உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா உதவியுள்ளது. இதேவேளை, பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா வலுவூட்டப்பட்ட கலப்பு உணவுத் தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை ஆதரிப்பதாக உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இலங்கை சிறுவர்களின் போசாக்கு குறைபாட்டை தடுப்பதற்கு தேவையான திரிபோஷ கலப்பு உணவுப் பொருட்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக எமது அண்மைய அவசரகால நிதியுதவியினூடாக இலங்கையுடனான எமது நீண்டகால கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு மகிழ்ச்சியடைகிறது. கடந்த ஆண்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் எங்கள் பங்காளிகளான உலக உணவுத்திட்டம், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன் திரிபோஷா தொழிற்சாலைக்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கடைசியாக அனுப்பப்பட்டதை நாம் அவதானித்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd