web log free
December 22, 2024
kumar

kumar

நேற்று (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
ஆஜரானார்.

இதன்படி, 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆஜரான அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அதன்படி, இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 04 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் சஹ்ரானை கைது செய்யுமாறு தான் தெளிவான பணிப்புரையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது தன்னை இலக்கு வைத்து பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இருந்து 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரளக் கஞ்சா நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கேரளக் கஞ்சாப் பொதிகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் டிங்கி இயந்திரப் படகு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்படுள்ளது.

நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளைக்கு சொந்தமான களனி கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றை அவதானித்து அதனை பரிசோதித்த கடற்படையினர், குறித்த டிங்கி இயந்திர படகில் மிகவும் சூட்சகமான முறையில் 10 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த கேரளக் கஞ்சா கொண்டு வரப்பட்ட டிங்கி இயந்திர படகினையும் கைப்பற்றியுள்ளனர்.

எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்களத்தின் நீர்கொழும்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதீகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் பின்னர் சீத்தாவகபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துன்புறுத்தல் குறித்து மாணவி பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து, நடத்துனர் மாணவியிடம் அவரது தந்தையின் கைத்தொலைபேசி இலக்கத்ததை பெற்று இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சிவில் அமைப்புக்கள் மத்தியில் தெரிவித்தது.

அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அரச சேவையில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அதனால் அரச சொத்துக்கள் பாரியளவு வீணாகுவதாக சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகையில், அரச பொறிமுறையில் இடம்பெறும் விடயங்களில் அரசியல்வாதிகள் நேரடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுகின்ற போதிலும் அரச அதிகாரிகள் இவ்வாறு வெளிப்படுவதில்லை எனக் குறிப்பிட்டனர்.

அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பிலும் குழுவி கலந்துரையாடப்பட்டது. அங்கவீனர்களுக்கு சதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார். அங்கவீன சமூகத்தினருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இந்த அடையாள அட்டை வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கனேடிய பிரஜைகளுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

விசா வழங்கும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதால், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு எவரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செயற்பாட்டுக் காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக விசா சேவைகளை வழங்கும் BLS-இன் இந்தியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

சீக்கிய பிரிவினைவாத தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு நேற்று பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனடாவிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் இன்று நிறுத்தியிருக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹா்தீப் சிங் நிஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு உள்ளதாக கனேடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது.

இந்திய அரசு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று(21) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை(20) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் கைதான முன்னாள் ஆணையாளர் மற்றும் முன்னாள் கணக்காளரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.அத்துடன் ஏற்கனவே குறித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 மற்றும் 4 ஆம் சந்தேக நபர்களான மாநகர சபை சிற்றூழியர்கள் பல்வேறு நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி அபூபக்கர் றகீப்பிற்கு வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை மாநகர சபையின் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அண்மைக்காலமாக நால்வர் கைதாகி இருந்தனர்.இதில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.ஏனைய மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து முன்னாள் கணக்காளர் மருதமுனை -5 பகுதியை சேர்ந்த ஏ.எச்.முகமது தஸ்தீக்(வயது-47) கைதானார்.இவ்வாறு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான முன்னாள் கணக்காளர் உள்ளிட்ட கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி முறைகேடுகள் எவையும் மேலும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

3 மாத சேவை நீடிப்பில் கடமையாற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் செப்டம்பர் 26ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

ஆனால் ஜனாதிபதி அவருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய காவல்துறை அதிகாரி நியமனம் தொடர்பான நிச்சயமற்ற நிலையே இதற்குக் காரணம்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரிடையே போட்டி நிலவும் நிலை உருவாகியுள்ளதுடன் இதன் ஊடாக தனித்தனி பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd