நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம அதிகாரிகளையும் உத்தியோகபூர்வ சமாதான நீதியரசராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் நெருக்கடியை உருவாக்கி ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் சீர்குலைக்கும் நோக்கில் குழுவொன்று செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பயிலரங்கு ஒன்றை நடத்தியதாகவும், ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது மற்றும் கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சட்டமூலம் தொடர்பான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான குழு அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறுபவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செய்ய மாட்டார்கள். அப்போது எதிர்க்கட்சியில் இருப்போர் திருடர்களைப் பிடிப்போம் என்று கூறி இரு தரப்பினராகப் பிரிந்து விமர்சிப்பர். திருடர்கள் பிடிபடும் வரை மக்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருடர்களை பிடிக்கும் முறைதான் நாளுக்கு நாள் மாறிவருகிறது என்று கூறிய அமைச்சர், இது முழுக்க முழுக்க நகைச்சுவையே என்றார்.
எந்த தகவலும் இல்லாமல் திருடர்களை திருடர்கள் என்று மக்களிடம் சொல்வது உண்மையான திருடர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கேடு என்றார்.
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ கேஸ் சமீபத்தில் எடுத்த முடிவுடன், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் இன்று அதன் விலையை குறைத்துள்ளது.
இன்று (6) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விலை குறைப்புடன், 12.5 கிலோ எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும். சில்லறை விலை ரூ. 3,690.
5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்படும். புதிய சில்லறை விலை ரூ.1,486 ஆகவும் இருக்கும் என்றார்.
தேச நலன் கருதி ஒன்றிணைந்து திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அழைக்கின்றாரா? அல்லது திருடர்களை காப்பாற்றவா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதியாவதற்கு உதவுவதாக கூறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து ஜனாதிபதியாக வருவதற்கு எவ்வாறு உதவினார் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அந்த உதவி தேவையில்லை என்றும், எங்கு செல்வது என்பது அரசியல் பேரங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கருத்தின் மூலம் தீர்மானிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தான் 21 வருடங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது திருட்டு சம்பவம் இடம்பெற்ற பின்னர் அதனை கண்டுபிடிக்க வந்தவர்களையும் திருட்டுக் கும்பலில் சேர்ந்து பங்காளியாகுமாறு அழைப்பதற்கு சமன் என மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
EPF இன் நோக்கமானது, பணியாளரின் ஓய்வூதியக் கட்டத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பணியாளரின் பங்கிற்கு வெகுமதி அளிப்பதும் ஆகும். ஆனால் அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் காரணமாக கடன் கழிப்பு செய்யப்பட்டு கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
அப்படி பார்க்கையில் இங்கையின் மொத்த உள்நாட்டுக் கடன் 12000 பில்லியன்களாகும். இது 74 சதவீதமாகும். இதில் 27 சதவீத கடன் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
எனவே இந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் நிச்சயமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் வங்கிகளுக்கும் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுசெய்ய வங்கிகள் கடன் வட்டி வீதங்களை அதிகரிக்க நேரிடும். நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைக்க நேரிடும். இதனால் நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.
குறிப்பாக 25 லட்சம் ஊழியர் சேமலாப நிதி பங்குதாரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி விகிதத்தை இழப்பர். அரசாங்கம் அவர்களுக்கு 9 சதவிகித வட்டி வழங்குவதாக உறுதி அளிக்கிறது. ஆனால் அதனை நம்ப முடியாது. அப்படியே வழங்க முற்பட்டால் வட்டி விகிதம் குறைந்தது 12 சதவிகிதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தம் உடனடியாக பாராளுமன்றில் செய்யப்பட வேண்டும்.
அரசாங்கம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு நாட்டின் பண முதலைகளை விட்டுவிட்டு நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் இறுதி மூச்சாக கருதப்படும் ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்துள்ளது.
சரியாயின் EPF, ETF பணத்தில் கை வைப்பதற்கு முன்னர் அந்த நிதிக்கு உரிமையாளர்களான தொழிலாளர்களிடம் அரசாங்கம் அனுமதி கோரியிருக்க வேண்டும். ஒருவரின் வைப்பு பணத்தில் அவரை கேட்காது அவருக்கு தெரியாது கைவைப்பது ‘திருட்டு செயல்’ அன்றி வேறு என்ன?
எனவேதான் இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தை திருடியுள்ளது என நாம் குற்றச்சாட்டு முன் வைக்கிறோம்.
EPF, ETF பணத்தை யானை விழுங்கியது என்ற குற்றச்சாட்டு போலதான் கடன் மறுசீரமைப்பில் EPF, ETF பணம் திருடப்பட்டுள்ள குற்றச்சாட்டும் காணப்படுகிறது.
எனவே அன்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று அதனை கை உயர்த்தி ஆதரித்துள்ளதன் மர்மம் என்ன? திருடப்படும் பணத்தில் பங்கு கிடைப்பதால் கை உயர்த்தி ஆதரவு வழங்கியுள்ளார்கள் என்றே கருத வேண்டும்.
ஆகவே திருட்டுக் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பாரிய திருட்டை செய்துவிட்டு அதற்கு ஆதரவு வழங்கி எங்களையும் திருட்டுக் கும்பலில் சேருமாறு அழைப்பது கேவலமான செயலாகும். இதற்கு ஒருபோதும் நாம் இணங்க மாட்டோம். அதற்கு பதிலாக திருட்டு கும்பலின் சதித் திட்டங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி அவர்களை விரட்டி அடிக்கவும் சட்டத்தின் முன் தண்டனை பெற்றுக் கொடுக்கவும் முழு மூச்சுடன் செயற்படுவோம்” என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி அதிகரித்துள்ளமை Verité Research நிறுவனம் மேற்கொண்ட 'Mood of the Nation' எனும் புதிய கருத்துக்கணிப்பில் நிரூபணமாகியுள்ளது.
Verité Research நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை 10 வீதமாகவே காணப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் தற்போதைய நிலை குறித்த திருப்தி அதிகரித்துள்ளதாக Verité Research நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில் முறையே 4% ,7% ஆக காணப்பட்ட அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை மதிப்பீடு 2023 ஜூன் மாதத்தில் 21% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதத்தில் அதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெறுபேறு -43.8 ஆக இருந்தது.
இது 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபரை விடவும் அதிகமாகும்.
நாட்டின் பொருளாதாரம் குறித்த மக்களின் நம்பிக்கையை மதிப்பிடுவதற்கு பல்வேறு கேள்விகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் -100 முதல் +100 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக Verité Research நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காதலியை தரையில் தள்ளி உதைத்த கிளிநொச்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை கடந்த 4ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி தனமல்வில ரணவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சந்தேகமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவரைச் சென்று பார்த்த போது தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் இந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பல லீசிங் நிறுவனங்கள் கொள்ளையர்களின் குழுவாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி பொலன்னறு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வங்கிகளில் கடன் பெற்றவர்களின் சொத்துக்களை ஏலம் விட வேண்டுமானால் அதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இடம்பெற்று வரும் காலதாமதம் தொடர்பான விவாதத்தின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகள் ஏன் அதிகரிக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும். வழக்குகள் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் பிரச்சனை முக்கிய காரணமாக உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வழக்கை விசாரிக்க அதிகபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். வழக்குகள் அதிகரிப்பதற்கு வறுமை ஒரு முக்கிய காரணம். நீதிமன்றங்களில் பெரும்பாலும் ஏழைகளின் வழக்குதான் இருக்கிறது. நீதிமன்றங்களில் பணக்காரர்கள் வழக்கு குறைவு. பரம்பரை பரம்பரையாக நில வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. வழக்குகள் நீடிப்பதால் சிறைகளில் நெரிசல் அதிகரிக்கிறது. வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதை வழக்கறிஞர்கள் விரும்புகிறார்கள். இன்று லீசிங் நிறுவனங்கள் நடந்து கொள்ளும் விதம் தவறானது. எப்போதும் அப்படித்தான். இப்போது அது மிகையாகிவிட்டது. ஒருதலைப்பட்சமான கொள்ளை போல நடக்கிறார்கள். வங்கிக் கடன் பெற்றவர்களின் சொத்துக்களை ஏலம் விட கால அவகாசம் வழங்க வேண்டும்.