web log free
July 27, 2024
kumar

kumar

நெலுவ பிரதேசத்தில் நேற்று (15) மாலை காணாமல் போன 3 வயது குழந்தையின் சடலம் அருகில் உள்ள ஓடையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தந்தையுடன் தனது தந்தையின் ஊருக்கு வந்தபோது குழந்தையை காணவில்லை. கடைசியாக, வீட்டின் முன்புறம் உள்ள சாலையோரத்தில், ஷார்ட்ஸ் அணிந்து, ஒரு பாட்டிலை கையில் வைத்திருக்கும் நிலையில் ஒரு குழு அவரைக் கண்டது.

குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கான பகுதிவாசிகளுடன் பொலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

பின்னர், குழந்தையை யாரோ கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு வரை வீட்டின் அருகே உள்ள ஓடையில் சோதனை செய்தும் எந்த தகவலும் வரவில்லை. எனினும் இன்று அந்த ஓடையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,542 - ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன் கிழமை10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,753 ஆகவும், சனிக்கிழமை 10,093 ஆகவும் பதிவாகி உள்ளது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை இலங்கையில் இருந்து சென்னை சென்ற ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரகிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

100,000 குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது இந்த நாட்களில் (15) மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் இல்லை என அவர் கூறுகிறார்.

உயிரியல் ஆராய்ச்சிக்காகவே குரங்குகள் இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவிருப்பதாகவும் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 அக்டோபரில் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போதுள்ள அரசியலமைப்புச் சூழ்நிலையின்படி, ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்த முடியும்.

முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா கூறுகையில் தற்போதைய ஜனாதிபதி ஒரு பிரதியீட்டு ஜனாதிபதியாக இருப்பதால், அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வ ஆணை அவருக்கு இல்லை என்று கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை மொட்டு கட்சி முன்வைப்பதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக உள்ள ஜானக ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கையை மதத் தலைவர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களின் குழுவொன்று இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவை இலங்கை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளது.

இதன் பெறுமதி 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Paris Club-இன் கடன் வழங்குநர்கள் தயாராகும் நிலையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டதன் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட முதலாவது முன்மொழிவு இதுவாகும்.

எனினும், இந்த முன்மொழிவு தொடர்பான எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை வௌியாகவில்லை.

அரசாங்க தரப்பும் கடன் வழங்குநர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. 

சுமார் 30 கடனாளர்களின் குழுவில், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான Amundi Asset Management, BlackRock, HBK Capital Management, T. Rowe Price Group ஆகியவை அடங்குவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான பொதுவான தளமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சியின் தலைமைப் பதவிக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த வேளையில், கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரண்டு பெயர்களுக்கு மேலதிகமாக அமைச்சரவையின் பிரதம அமைச்சர் ஒருவரின் பெயரும் கட்சித் தலைமைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான சிவில் யுத்தத்தின் போது, மோதல் உக்கிரமடைந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக டேனியல் உரெஸ்டிக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் ஆராய்ந்த ஊடகவியலாளரான Bustios-உம் மற்றுமொரு ஊடகவியலாளரான Eduardo Rojas-உம் தாக்குதலுக்கு உள்ளானதுடன், காயமடைந்த Rojas அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டாலும், Bustios பலத்த காயமடைந்து அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

பின்னர் இராணுவ அதிகாரிகள் அவரின் உடம்பில் வெடிபொருட்களை போட்டு வெடிக்கச் செய்து கொலை செய்தனர். 

அந்த வேளையில், புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான கெப்டனாக இருந்த பெருவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் டேனியெல் உரெஸ்டி 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Bustios-ஐ கொலை செய்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பெருவில் நீண்ட காலம் அரசியல் ஸ்திரமற்றநிலைமை காணப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை அந்நாட்டில் ஏழு ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளதுடன், சில ஜனாதிபதிகளின் பதவிக்காலம் ஒரு சில நாட்களாக மட்டுமே பதிவாகியுள்ளன. 

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் குகதாசன் சகிதமாக திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தோம்.

திருகோணமலை, புல்மோட்டையில் பிக்குவின் அட்டகாசங்கள் குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள், இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து தங்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கூறுவதற்கு நீங்களும் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க நாம் அங்கு விஜயத்தை மேற்கொண்டோம்.

சில நேரங்களில் பிக்குமார்கள் நேரடியாக புல்மோட்டை மக்களிடம் வந்து துப்பாக்கிகளைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவது மற்றும் கற்களை போடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

வடக்கு – கிழக்கிலே தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் அனைத்து பிரதேசங்களிலுமே இது போன்ற விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் இவ்விடயங்களுக்கு எதிராகப் போராட்டங்களை செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட ஒரு இடத்தில் இதே பிக்கு இரவு நேரத்தில் இராணுவ பாதுகாப்புடன் வந்து காணி அபகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை விரட்டியடித்தோம். இது போன்ற அடாவடி பிக்குகளிடம் இருந்து எங்கள் காணியைக் காப்பாற்ற வேண்டும். இவற்றுக்கான தகுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- சாணக்கியன் - பாராளுமன்ற உறுப்பினர் 

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரே கூட்டணிக்குள் கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே என  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவாதத்தில் எந்த ஒரு கட்டத்திலும் பிரதமரின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், அது குறித்த யோசனைகளை முன்வைப்பது மிகவும் தாமதமானது என்ற புரிதல் தனக்கு இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் இந்த கூட்டணி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நல்ல பதில் கிடைக்காததால் விவாதம் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஊடாக செய்தி அனுப்பியுள்ளதாக சில ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என எம்.பி மனோ கணேசன் தெரிவித்தார். 

“மேலும் நான் தூதர் அல்ல. நல்லெண்ணத்துடனும் கருத்தியல் ரீதியாகவும் ஒரு விவாதத்தில் நடுநிலையாளராகத் தோன்றும் வாய்ப்பு இருந்தாலும் தூதுவராக நான் நடிக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன மேலும் தெரிவித்தார்.

உதயமாகும் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும் மகிழ்வும் நிறைந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்ததுடன், அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறிய ஆறுதல் தருகின்ற சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அடுத்த புத்தாண்டில் இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார். 

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் சங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டை மாத்திரமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, நாடு முகங்கொடுத்துள்ள உணவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை, இந்த புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

தொற்றுநோய் பரவல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் ஆகியன அண்மைக்கால வரலாற்றில் கண்டிராத ஒன்று எனவும் 

இவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும், புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனிய புத்தாண்டு இன்று முதல் மலர வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கூறியுள்ளார்.

இருண்ட காலம் முடிவடைந்துவிட்டது எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தின் அடிப்படையில், வளமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாட்டு மக்கள் உறுதியுடன் ஒன்றுதிரளும் வலிமையைப் பெற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு, பல சவால்களுக்கு மத்தியில் புத்தாண்டு உதயமாகின்ற போதிலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சுபீட்சமும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்பதே, அனைத்து மக்களினதும் ஒரே நம்பிக்கை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.