web log free
December 21, 2024
kumar

kumar

சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோகிராம் கேரள கஞ்சா மன்னார் இலுப்பகடவாய் தடாகத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய கப்பல்களால் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 92 கிலோகிராம் 250 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்ட மூன்று மூட்டைகள் அருகிலுள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 

இதன்படி, போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வற் வரி அதிகரிப்புடன் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 4 வகைகளின் கீழ் சிகரெட்டின் விலை ரூ. 5/-, ரூ. 15/-, ரூ. 20/-, மற்றும் ரூ. 25/ ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது.

 

ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சுமார் 6000 ஊழியர்களின் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (30) ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கம் தொடர்ந்தும் பராமரிக்க முடியாது எனவும், மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்தும் வீணடிப்பது நியாயமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நிதி நிபுணர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை (01) நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதில்லை எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியின் தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த சனிக்கிழமை (ஜூலை 01) ஒரு சிறப்பு பாராளுமன்ற அமர்வு கூட்டப்படும், இதன் போது கடன் மறுசீரமைப்பு திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு செல்லும் மற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புது டில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நெருக்கடியில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முயற்சிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாராட்டியதாக செந்தில் தொண்டமான் கூறினார். 

அத்துடன் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவென இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜெய் சங்கருக்கு கிழக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அபிவிருத்தி செய்தல், திருகோணமலை கைத்தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வாழும் 15,000 குடும்பங்களுக்கு இந்திய மானியத்தில் சோலார் பேனல்களை ஒதுக்கீடு செய்வதற்கும், கோணேஸ்வரம் கோவிலை அபிவிருத்தி செய்தல்,  இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கை அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் தோட்டப் பகுதிகளில் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வகத்துடன் கூடிய பாடசாலைகளை மேம்படுத்துதல், சிறிய ஆம்புலன்ஸ்கள் மூலம் மலையகத்திற்கு ஆதரவு வழங்கி தோட்டத் துறைக்கு சேவையாற்றுவதுடன், மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் உதவியை கோருதல் போன்ற விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு தனது ஆதரவை வழங்குவதில் ஜெய் சங்கர் சாதகமான நிலையில் உள்ளார் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

கடன் மறுசீரமைப்பின் போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இன்று(29) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. 

நாட்டின் வங்கி கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்தார்.

இதனூடாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்டுள்ள முறிகள் மற்றும் EPF, ETF உள்ளிட்ட நிதியங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள முறிகள் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

இதன் கீழ் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து முறிகளையும் புதிய வட்டி வீதத்தின் கீழ் மீள விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள முறிகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி செலுத்தப்படுவதுடன் அதன் பின்னர் 9 வீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது கூறியுள்ளார்.

புதிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தினூடாக EPF மற்றும் ETF நிதியங்களின் அங்கத்தவர்கள் தமது பணத்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்றைய(29) ஊடக சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். 

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. 

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்னர்.

இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது. 

நபி இப்ராஹிம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம் மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.

இறை தூதுவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். 

இன்று (29) ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஆசியன் மிரர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd