இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை மாகாண சபை உறுப்பினர் மன்ற கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
2023 ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களுக்கு பாரம்பரிய காணிகளை மீளக் கையளிக்கும் நடவடிக்கையை முறைப்படுத்த நிரந்தர அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க உத்தரவின் பேரில் இந்த அலுவலகம் நிறுவப்பட்டது.
இராணுவப் பிரிகேடியர் தலைமையில் இயங்கும் இந்தக் காரியாலயத்தின் மூலம் குறித்த பிரச்சினைக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரிய காணி உரிமையாளர்களுக்கு அநீதி இழைக்காத வகையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உரிய அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டளவில், பாதுகாப்புப் படையினர் 23,850.72 ஏக்கர் நிலங்களைக் கொண்டிருந்தனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், 20,755.52 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. மேலும் 106 ஏக்கர் காணி 2023 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் விடுவிப்பதற்காக மேலும் 2989.80 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியதன் பின்னர் அந்தத் தொகையும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் பாரம்பரிய காணிகளை மக்களுக்கு விடுவிப்பதற்காக முறையான அமைப்பை தயாரிக்கும் நோக்கில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று முன்மொழிந்தார்.
“இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். சில மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய் என்றால் என்ன என்று தெரியாது. சில குழந்தைகள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு எயிட்ஸ் நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது, ”என்று அமைச்சர் கூறினார்.
"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
குளோபல் ஸ்ரீலங்கா காங்கிரஸின் தலைவர் மஞ்சு நிஸ்ஸங்க தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் விபத்தின் பின்னர் ஏற்பட்ட விபத்தின் இழப்பீடு தொடர்பான கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்த விசாரணை கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை கவனத்தில் கொள்வதே இதற்குக் காரணம்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சொத்து விசாரணைப் பிரிவினரால் மஞ்சு நிஸ்ஸங்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகவில்லை.
அழைப்பு கிடைக்கவில்லை என பொலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதன்படி, அவருக்கு அடுத்த வாரம் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திஞல் போராட்டம் இடம்பெற்ற நாட்களில் இவர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில் கவனம் செலுத்தி, அப்படிச் செலவு செய்ய அவர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதையும் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
அவரது சொத்துக்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவாலயத்துக்குள் துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி தினமும் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, நேற்றுமுன்தினம் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்தபோது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம், 255 சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களின் அருகே வரிசைகள் ஏற்பட இதுவே காரணம் என தெரியவந்துள்ளது.
எனவே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள்.
இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார். காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள,தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார்.
விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்புபடுத்தி காணிகள் தருவதாக சொன்னார். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக இப்போதும் போகிறது.
இன்று, பிரதமர் ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால் எமது மக்களுக்கு காணி கிடைக்கவில்லை.
அந்த திட்டத்துக்கு பெயரும் வைத்தார். "மனோ கணேசன் பிளான்" என்று சொன்னார். எனக்கு பெயரும் வேண்டாம். வாக்கும் வேண்டாம். அவற்றை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள். எமது மக்களுக்கு காணி கிடைத்தால் எனக்கு போதும்.
இந்த முக்கியமான விடயத்தை நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக எதிர்கட்சி தலைவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இந்த முக்கியமான விடயம் பேசும் போது இங்கே, விவசாய, கல்வி, பெருந்தோட்ட அமைச்சர்கள் இருக்கிறீர்கள். எங்கே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்? அவர் இங்கே சபையில் இருந்திருக்க வேண்டும்.
நீங்கள் காணி தருவது ஒருபுறம் இருக்கட்டும். இதை பாருங்கள். உங்கள் தென்மாகாண மாத்தறை தெனியாய மொரவக்க தோட்டத்தில், அப்பாவி தோட்ட மக்கள் விளைவித்த வாழை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்களை காடையர்கள் வெட்டி நாசமாக்கி உள்ளனர்.
இதென்ன அநியாயம்?
நாம் இந்நாட்டு பிரஜைகள்தானே? இன்று பிரஜாவுரிமை இருந்தாலும் முழுமையான பிரஜைகளாக நாம் இன்னமும் மாறவில்லை.
நாம் இலங்கைக்கு வெளியே வழி தேடவில்லை. இலங்கை என்ற வரம்புக்குள் முழுமையான இலங்கையாராக வாழத்தான் விரும்புகிறோம்.
இன்று கல்வி, சுகாதாரம், எல்லாவற்றிலும் நாம் பின்தங்கி உள்ளோம். எமது மக்களுக்கு விசேட அவதானம் தேவைப்படுகிறது. அதை காட்டுங்கள்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நற்பெயருக்கு பொலிசார் சேதம் விளைவித்ததாக முறைப்பாடு செய்ததன் பிரகாரம் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் மரதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்களை யாழ் மனித உரிமைகள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற தகராறு தொடர்பில் கடந்த 7ஆம் திகதி மாரதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்திற்கு வந்த நிலையில், கடந்த 2ஆம் திகதி தகவல் வழங்க வந்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்க முயற்சித்ததாகவும், திட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் மாரதங்கேணி பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும் மனித உரிமை அலுவலகத்திற்கு வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சில மணிநேர விசாரணையின் பின்னர் திரும்பிச் சென்றதையடுத்து மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மனித உரிமை அலுவலகத்திற்கு வர உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய விசேட கலந்துரையாடலொன்று இன்று (ஜூன் 8) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
வடக்கில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தினருக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் தமிழ் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.