ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று (19-06-2023) ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேநேரம் இலங்கை தமிழர்களுக்கு நீதிகோரி அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழற்பட ஆதாரங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கே வருகின்ற வெளிநாட்டினர், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிழற்படம் குறித்து தமிழின செயற்பாட்டாளர் விளக்கமளித்து வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக இந்த நிழற்படக் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்று வெளிநாட்டவா்கள் பலா் இவற்றை பாா்வையிட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.
இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ். வாகீர் (INS vagir) என்ற நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுப்படி நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர் .
இது 67.5 மீற்றர் நீளம் கொண்ட நீர்மூழ்கிக்கப்பலாகும்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளை பிரிவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் நீர்மூழ்கிக் கப்பலின் முழு இந்திய கடற்படையினரும் மற்றும் இலங்கை கடற்படையின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவும் இந்திய கடற்படையிரும் நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி புறப்பட உள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் படி, இன்றைய (19) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.297.53 ஆகவும் விற்பனை விலை ரூ.315.12 ஆகவும் உள்ளது.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த அழைப்பை பொஹொட்டுவ தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொஹொட்டுவ தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொஹொட்டுவ பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை அழைத்து இந்த கலந்துரையாடலில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
“இருவரும் போனால் நானும் வரவேண்டியதில்லை. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொள்வதால் தாம் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு தரப்பினரையும் அழைத்து என்ன பேசுவது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் என்ன பேசுவது, அவர்களுடன் எவ்வாறு பேசுவது என்பன குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சில அரசியல் பாடங்களை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, பிரதமரின் அழைப்பின் பேரில் கட்சித் தலைவர்கள் கடந்த புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடினர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தவிர பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், டிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், ஜனாதிபதி சார்பில் வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுன்விலவில் அமைந்துள்ள கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீட்டை சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலினால் வீட்டின் எட்டு ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த போது வீட்டில் யாரும் இல்லை. இராஜாங்க அமைச்சரின் வீட்டை தாக்கியவர்கள் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை கைது செய்ய சபுகஸ்கந்த பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்து சந்தேக நபர்களை அடையாளம் காணவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குருந்தன்மலை விகாரை குறித்து பேசப்படும் நிலையில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், பலப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பதிலளித்தார்.
அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
“பௌத்த மதத்திற்கும் சாசனத்திற்கும் ஒரு சவால் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தச் சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டது. எங்கள் தேரர் அவர்களே, அடிக்கக்கூடிய ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் அடிக்கிறார். புத்த பெருமானின் போதனைகளின்படி நாம் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது பயம் அல்ல. நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அரச சட்டம் மறுபக்கம். இவை இரண்டையும் மாற்றியமைக்க வேண்டும். நாம் அதை அனுசரித்துச் செல்லும்போது அதைக் கோழைத்தனம் என்று சிலர் நினைக்கிறார்கள். இல்லை. சரியான நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்” என்றார்.
ஏறக்குறைய இரண்டு வாரங்களாக Octane 95 பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இவ்வகை பெற்றோல் கையிருப்பு இல்லாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
எண்ணெய் கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் இருப்புக்களை முறையாக பராமரிக்காததே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாதகமாக செயற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கக் கட்சித் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொட்டுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களை நீக்குவதற்கு சில அமைச்சர்கள் செயற்பட்டுள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது தொழிற்சங்கத் தலைவர்களை துன்புறுத்தும் அமைச்சர்களும் துளிர்விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் மத்தியஸ்தம் செய்யுமாறு கோரிய போது, தான் மத்தியஸ்தம் செய்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரக்குவானை ஒபோதகந்த டோலா காட்டில் இரத்தினக்கல் தோண்டியவர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இரக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான நாற்பத்தெட்டு வயதுடைய செல்லமுத்து செல்வகுமார் மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நாற்பத்தைந்து வயதுடைய எஸ்.தியாகராஜா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.