web log free
May 06, 2024
kumar

kumar

பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தக பங்காளி என அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டார என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (17) பிற்பகல் ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆராய்ச்சி மற்றும் தகவல் உத்தியோகத்தர் திரிவன் அன்னக்கரகே, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது, ​​நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.

இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 370 ரூபாவாகவும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 இலங்கை தமிழர்கள் இன்று (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கி தஞ்சம் கோரியுள்ளனர். 

இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டை அடைந்துள்ளனர்.

தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம்  பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தந்த அமைச்சுக்களின் நிறுவனங்களில் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்காத அமைச்சரவை அமைச்சர்களின் செலவுத் தலையீடுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஆதரவளிக்காது இருப்பது  பற்றியே இவ்வாறு கலந்துரையாடப்பட்டது.

இந்த இரகசிய கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அமைச்சரவை அமைச்சர்களுக்கு பல விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கவில்லை எனவும் இந்த இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போதைய அமைச்சரவையை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அதே அமைச்சரவையை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் சபையில் உள்ள அமைச்சர்கள் பலர் மொட்டுவின் சித்தாந்தத்திற்கு முரணான கருத்துக்களைக் கூறுவதால் அவர்களை மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக்கூடாது எனவும் மொட்டு கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, மொட்டுவின் ஆலோசனைகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (17) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (17) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய மண்டலங்களில் ஒரு மணி நேரம் பகல் நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு ஏற்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

வளிமண்டலவியல் திணைக்களம் 2010 ஆம் ஆண்டு முதல் கொக்கல ராடார் அமைப்பை அமைப்பதற்காக 40 கோடி ரூபாவிற்கும் அதிகம் (402.8 மில்லியன் ரூபா) செலவிட்டுள்ளது. ஆனால் இதுவரை ரேடார் அமைப்பு கட்டப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ரேடார் அமைப்பை நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 91 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொருட்கள் காணாமல் போயிருப்பது குறித்தும், தோல்வியடைந்த திட்டத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்தும், அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்தும் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் தற்போதுள்ள பொருட்கள் மற்றும் கோபுரத்துடன் கூடிய கட்டிடம் தற்காலிக பாவனைக்காக அங்கு நிலைகொண்டுள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரி கணக்காய்வரிடம் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட இந்த மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். 

இதனைக் காண இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வசதிகள் மூலம் மேற்படி வருமானம் பெறப்படுவதாக தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 15ம் திகதி 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2612 பேர் வந்து பார்வையிட்டு அதன்மூலம் 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக அவர் கூறினார். 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்கொள்ள மக்கள் போராட்டத்தில் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை அரசு போராட்டத்தை அடக்க முடிந்ததாகவும், இம்முறை அப்படி நடக்காமல் இருக்க தனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து போராட்டத்திற்கான அடித்தளத்தை தயார் செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மிகவும் அநியாயமாக மக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தின் அடக்குமுறை அமுல்படுத்தப்படுமாயின் அதனை எதிர்கொள்ள ஆயுதம் ஏந்தியவாறு போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.