இன்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விடுவிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் வரிசையில் காத்திருந்து தேவையற்ற நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என தொழிற்சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இன்று முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்துள்ளார்.
நாளை நாட்டிற்கு வரவுள்ள டீசல் கப்பலை இறக்கிய பின்னரே வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீசலை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் விநியோகத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ரோபெரி என வர்ணிக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியவுள்ளது.
ஸ்ட்ரோபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக கூறும், நாசா விஞ்ஞானிகள் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ட்ரோபெரி சூப்பர்மூன் என்றால் என்ன?
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும்.
இதுவே “சூப்பர் மூன்”. தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது.
ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் “இளஞ்சிவப்பு” நிறத்தில் ஒளிரும். இதைத்தான் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று அழைக்கின்றனர்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளனர்.
காணாமல் போன தாய்க்கு 55 வயது எனவும் அவரது மகனுக்கு 16 வயது எனவும் மருமகனுக்கு 22 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மருதானை ஜினானந்த மாவத்தையில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்து 6 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்கள் 2000 ரூபா முதல் 5000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு விபச்சாரிகளில் 21 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டிய, பசறை, கம்பளை மற்றும் வடுமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேருடன், லுனுகல மற்றும் கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆறு சந்தேக நபர்கள் உட்பட 8 பேர் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்தனர்.
இந்திய நிதியுதவியுடன் எரிபொருள் தாங்கி கப்பல் நாளை இலங்கைக்கு வரவுள்ளது.
இதன் பின்னர், ஒரு டீசல் அல்லது பெட்ரோல் கப்பல் வருவதற்கான சரியான திகதியைக் குறிப்பிடுவது சாத்தியமற்றது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல கிலோமீட்டர் நீளமுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் வரிசை அடுத்த சில நாட்களில் மேலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் 20,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் சுமார் 10,000 மெற்றிக் தொன் பெற்றோல் உள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு வந்த எரிபொருள் தாங்கி ஒன்று கட்டணம் செலுத்தப்படாமையால் சுமார் 20 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு ராஜபக்சவும் மீண்டும் பதவி விலகத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கு பதவி விலக வேறு நபர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மற்றுமொரு சக்திவாய்ந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ராஜினாமா கடிதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் பிரதித் தலைவராக கடமையாற்றிய நளிந்த இளங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
இந்தியப் பிரதமர் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நாசப்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் தலைவரின் அறிக்கையை நிராகரித்தார். பின்னர் அந்த அறிக்கையை வாபஸ் பெறுவதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கோப் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்தார்.
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதித பீரிஸ் எதிர்வரும் புதன்கிழமை தமது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், கடந்த வௌ்ளிக்கிழமை பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயன்படுத்திய ஆறு அரச வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விவசாய அமைச்சு போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது.
அமைச்சருக்கு இணைக்கப்பட்ட மூன்று வாகனங்களும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
விவசாய இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது ஜனாதிபதியினால் வேறு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் அவரது பணியாளர்கள் அதே வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்றுள்ளனர்.
இந்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள போதிலும் இதுவரையில் அவை கையளிக்கப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் அரசியலில் இருந்து விலகியமையே இதற்குக் காரணம்.
தற்போது மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பாரியளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விரைவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரசியலில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.